மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

கோவா: மது அருந்தினால் அபராதம்!

கோவா: மது அருந்தினால் அபராதம்!

பொது இடங்களில் மது அருந்தினாலோ அல்லது சமைத்தாலோ அபராதம் விதிக்கும் புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது கோவா மாநில அமைச்சரவை. மாநில பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, கோவா சட்டமன்றத்தில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்பவர்களின் சொர்க்கங்களில் ஒன்றாக விளங்கி வருவது கோவா. குறிப்பாக இளைய தலைமுறைக்குப் பிடித்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருந்து வருகின்றன இங்குள்ள கடற்கரைகள். உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் அதிகளவில் இங்கு வருகை தருகின்றனர். இதனை முன்னிட்டு கோவா கடற்கரைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அம்மாநிலத்திலுள்ள பாஜக கூட்டணி அரசு. முக்கியமாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை மாநிலத்தில் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த முனைந்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று (ஜனவரி 24) புதிய சட்டமொன்றுக்கு கோவா மாநில அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி, “கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மது பாட்டில்களை உடைக்கக் கூடாது; பொதுவெளியில் மது அருந்தக் கூடாது; திறந்தவெளியில் உணவு சமைக்கக் கூடாது. இந்தத் தடையை மீறுவோருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும். இந்த தவறை ஒரு குழுவினர் செய்யும்போது, 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றிப் பேசிய கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் மனோகர் அகனேக்கர், இந்த சட்டத் திருத்தத்துக்குப் பிறகு குற்றம் செய்வோரின் புகைப்படங்கள் சுற்றுலாத் துறையின் சிறப்பு தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது 12 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கோவா பயணம் மற்றும் சுற்றுலா கூட்டமைப்புத் தலைவர் சேவயோ மெசியாஸ் இது பற்றிப் பேசுகையில், இதன் மூலமாகக் கோவாவுக்கு வருகை தரும் கீழ்த்தரமான பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்றார். “சுற்றுலாப் பயணிகளின் செயல்பாடுகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால், வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர் எவரும் பொதுஇடங்களில் துப்புவதோ, முறையற்ற உடைகளுடன் பொது இடங்களில் உலாவுவதோ, சாலைகளில் மது அருந்துவதோ கிடையாது” என்று கூறினார்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon