மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

முதலீட்டாளர்கள் மாநாட்டால் வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா?

முதலீட்டாளர்கள் மாநாட்டால் வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா?

2015 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், 3,00,431 கோடிக்கு மேல் தமிழகத்தில் முதலீடுகள் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தத் தொழில் முதலீடுகள் மூலம் சுமார் 10,50,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, காஸ்கேட் என்ற நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 2015ல் நடந்த மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராயாததால், பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலீட்டாளர்கள் மாநாட்டை எதிர்க்கவில்லை என்றும் தமிழக அரசின் முயற்சியைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதாகவும், அந்த நிலை இந்த ஆண்டு ஏற்படக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் இந்த ஆண்டு மாநாட்டில் பங்கேற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும், மாநாட்டில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கு எந்த மாதிரியான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அரசு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போதே நிறுவனங்களின் நம்பகத்தன்மை ஆராயப்படும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு இன்று (ஜனவரி 25) தீர்ப்பு வழங்கியது. அதில் இந்த ஆண்டிற்கான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிக செலவு செய்து நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொழில்களாக மாறி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஈர்க்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கிறதா? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon