மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

ரஜினி - முருகதாஸை இணைத்த ‘ஞாபக மறதி’!

ரஜினி - முருகதாஸை இணைத்த ‘ஞாபக மறதி’!

தமிழ் சினிமா 365: பகுதி - 24

இராமானுஜம்

தமிழ் சினிமாவில் ஞாபக மறதி இருந்தால் மட்டுமே பிரபலமான நடிகர் - இயக்குனர்களை இணைத்து படம் தயாரிக்க முடியும் என்பதற்கு லைகா மிகச்சிறந்த உதாரணமாகும். இயக்குனர் A.R.முருகதாஸ் இயக்குனராக அறிமுகமான தீனா படம் தொடங்கி கடந்த வருடம் அவர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சர்கார் படம் வரை சர்ச்சைகளை சந்திக்காத படம் எதுவும் இல்லை. அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் அமைச்சர்களாகவும், அரசியல் கட்சி தலைவர்களாகவும் மாறிவிடுவது தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அது சினிமாவில் அன்றாட நிகழ்வுகளாகி வருகிறது.

குறுகிய காலத்தில் படம் தயாரித்து பெரும் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் இயக்குனரின் கடந்த கால தவறுகள் அல்லது அவர் மீது இருக்கும் குற்றசாட்டுகள் பற்றி யோசிப்பதும், கவலைப்படுவதும் இல்லை. லைகா தமிழில் நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தை முதல் படமாக தயாரித்தபோது அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் சொன்ன பட்ஜெட்டுக்கு அதிகமாக செலவு இழுத்துவிட்டார் என்ற குற்றசாட்டு எழுந்தது. அதனால் லைகா நிறுவனத்திற்கும் - முருகதாஸுக்கும் நடந்த பஞ்சாயத்துகள் சொல்லி மாளாது. இனி இவருடன் இணைந்து பணியாற்றுவது இல்லை என்ற முடிவுக்கு லைகா நிறுவனம் வந்ததாகக் கூறப்பட்டது.

சர்கார் படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டிருந்தது. சர்கார் படத்தின் கதையும் திருடப்பட்டது தான் என்ற குற்றசாட்டு எழுந்து அது உண்மைதான் என்று நிரூபணமான பின்பு சன் பிக்சர்ஸ் முருகதாஸ் இயக்கத்தில் படம் தயாரிக்கும் முடிவை கைவிட்டது.

ரஜினிகாந்த், முருகதாஸ் தவிர்த்து வேறொரு இயக்குனர் இயக்கத்தில் ஆர்வம் காட்டவில்லை. ‘கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருக்கா’ என்கிற கொள்கை உடையவரான ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளரை அவரே முடிவு செய்வதாகக் கூறியதால் முருகதாஸ் மெளனமாக இருந்தார்.

ரஜினி நடித்து வெளியான 2.0 எதிர்பார்த்த லாபத்தைத் தரவில்லை. எனவே, மீண்டும் அவரிடம் ஒரு படத்திற்கு கால்ஷீட் கேட்க லைகா யோசிக்கத் தொடங்கிய நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தை தயாரிக்குமாறு கூறியுள்ளார் ரஜினி. கத்தி படத்தில் முருகதாஸிடம் சூடு வாங்கிய லைகா, லாபமே பிரதானம் என்பதால் ரஜினியின் இந்த முடிவை ஏற்றுக் கொண்டுள்ளது. முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் கதைத் திருட்டு வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. இது எதைப்பற்றியும் யோசிக்காமல் லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்டு, முந்தய கதையெல்லாம் மறக்கப்பட்டு முருகதாஸ்-ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைகிறது.

ஊழலுக்கு, சட்ட விதிமீறலுக்கு எதிராக தனது படங்களில் கதாநாயகன் மூலம் உரத்த குரல் கொடுக்கும் முருகதாஸ், நிஜத்தில் பிறர் கதையைத் திருடி படம் இயக்கியவர் என்ற அழுத்தமான அடையாளத்தின் குறியீடாக இருக்கிறார். “தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. ஆண்டவன் சொன்னால் அதனை ஒழிக்க தேர்தலை சந்திப்பேன்’ எனக் கூறிய ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கத்தில் எந்த குற்ற உணர்வும் இன்றி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதை ‘அரசியல் போன்று சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா’ என கோடம்பாக்கம் குமுறி வருகிறது.

முந்தைய பகுதி: விஷாலின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது!

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon