மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 10 ஆக 2020

உளவுத் துறை எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு!

உளவுத் துறை எச்சரிக்கை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை (ஜனவரி 26) நடைபெறவுள்ள குடியரசு தின விழாவைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குடியரசு தினத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்தும், தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அனைத்து மாவட்ட காவல் துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிப்பாட்டுத் தலங்கள், மால்கள் ஆகிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்று விழுப்புரம் கோவை, மதுரை, உட்பட மாநிலம் முழுவதும் முக்கிய ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமான நபர்களைப் பிடித்து விசாரிக்கவும், வாகன சோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேறு பெயரில் புதிய அமைப்பை உருவாக்கித் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் எச்சரித்துள்ள உளவுத்துறை இதுதொடர்பாக 12 பேரைக் கைது செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லியில் குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த இருவரை போலீசார் இன்று (ஜனவரி 25) கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இருவரும் தனித்தனியே டெல்லியில் இரு இடங்களைத் தேர்வு செய்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், அவர்கள் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அப்துல் லதீப் கனி மற்றும் ஹிலால் அகமது பட் என்பது தெரியவந்துள்ளது.

உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, ரஜோவ்ரி உள்ளிட்ட ஜம்முவின் எல்லைப்பகுதி மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon