மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

மேகதாட்டு அணை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மேகதாட்டு அணை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மேகதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் அறிக்கையை திரும்ப அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 25) கடிதம் எழுதியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கர்நாடக அரசு தயாரித்த வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, மேகதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாகக் கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவே அனுமதி வழங்கப்பட்டது. அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திலும் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது கர்நாடக அரசு. அதில், விரிவான திட்ட அறிக்கை நீர் வள ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையையும், வழக்கு விசாரணையின் போது பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக அறிக்கையை நிராகரிக்க வலியுறுத்தி மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போது, கர்நாடக அரசு தாக்கல் செய்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க நீர்வள ஆணையத்திற்குப் பிரதமர் உத்தரவிட வேண்டும். அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். அம்மாநில அரசின் அறிக்கையைத் திரும்ப அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

லட்சக் கணக்கான தமிழக டெல்டா விவசாயிகள் காவிரி நீரை நம்பி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், இவ்விவகாரத்தில் நேர்மறையான பதிலை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon