மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 10 ஆக 2020

மேத்யூ வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

மேத்யூ வழக்கு: நீதிமன்றம் உத்தரவு!

கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூ சாமுவேல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா என்பது குறித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேத்யூ சாமுவேல் ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டார். அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதாலேயே இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இதையடுத்து, ஆவண படத்தை வெளியிட்ட மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் மீது இரு பிரிவினரிடையே கலவரம் ஏற்படுத்தியது, பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேத்யூ தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பு இன்று (ஜனவரி 25) விசாரணைக்கு வந்தது.

அப்போது, எந்த உள்நோக்கமும் இல்லாமல் இந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டதாக மேத்யூ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தனக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டை கொண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு, முதல்வருக்கு எதிராகத் தவறான குற்றச்சாட்டை பரப்பியதால், இரு கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டத்திற்குட்பட்டு தான் இந்தப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஆளுநர் மாளிகை முன் திமுகவினர் நடத்திய போராட்டத்தால் போக்குவரத்து முடங்கி பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்ததாகவும், எனவே இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள கூடாது எனவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா என்பது குறித்த உத்தரவைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon