மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 5 டிச 2020

சபரிமலை விவகாரம்: இயக்குநர் மீது தாக்குதல்!

சபரிமலை விவகாரம்: இயக்குநர் மீது தாக்குதல்!

சபரிமலை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த மலையாள இயக்குநர் பிரியானந்தன் மீது சாணி கரைசல் ஊற்றப்பட்டு இன்று (ஜனவரி 25) காலை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு ஆதரவாக, ‘ஆர்போ ஆர்தவம்’ (மாதவிடாய் அசுத்தமல்ல) என்ற நிகழ்வு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக இயக்குநர் பிரியானந்தன் கருத்து தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கவிதை ஒன்றைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கொலை மிரட்டல்களும் வந்தன.

சபரிமலை கர்மா சமிதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி பிரியானந்தன் வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் தனது முகநூல் பதிவை நீக்கினார்.

இந்நிலையில் திருச்சூர் மாவட்டம் வெள்ளசிரா பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது சாணி கரைசலை அவர் மீது ஊற்றி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

அதன்பின் அவர் செர்பு கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ்., பாஜக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தன் மீது தாக்குதல் நடத்தினர் என்றும் அவர்களை தன்னால் அடையாளம் காட்டமுடியும் என்றும் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செர்பு காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தி நியூஸ் மினிட் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “அவர் இதுவரை புகார் அளிக்கவில்லை. ஆனால் புகார் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அவர் குணமாகி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்தத் தாக்குதல் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். “வலது சாரி குழுக்களால் அவருக்கு சில வாரங்களுக்கு முன்பாகவே மிரட்டல்கள் வந்துள்ளன. இது போன்ற தாக்குதல்கள் படைப்பு சுதந்திரத்துக்கு எதிரானதாகும். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என அவர் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் நெய்துகரன், புலிஜென்மம், சுஃபி பரஞ்ச கதா, பதிர காலம் உள்ளிட்ட பல படங்களை பிரியானந்தன் இயக்கியுள்ளார். புலி ஜென்மம் திரைப்படம் 2006ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon