மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

கிணற்றில் தள்ளப்பட்ட குழந்தை பலி!

கிணற்றில் தள்ளப்பட்ட குழந்தை பலி!

இரண்டு பவுன் நகைக்காக கையில் குழந்தையுடன் இருந்த பெண்ணைக் கிணற்றில் தள்ளினர் கொள்ளையர்கள். இந்த சம்பவத்தில் அந்த குழந்தை பலியானது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள இலுப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர்

பிரியங்கா காந்தி. இவரது வயது 24. இவரது கணவர் பெயர் சிவசங்கர். ஏற்கனவே, இந்த தம்பதியரின் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து, இறந்து விட்டன. இவர்களது மூன்றாவது பெண் குழந்தையின் பெயர் ஷிவானி.

தற்போது கடலூர் மாவட்டம் வேப்பூரில் வசித்து வருகிறார் சிவசங்கர். இலுப்பநத்தம் கிராமத்தில் தனது 5 வயது குழந்தை ஷிவானியுடன் இருந்து வந்தார் பிரியங்கா காந்தி. நேற்று (ஜனவரி 24) மாலை 6.00 மணியளவில் பிரியங்கா காந்தி தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு கொள்ளையர்கள், பிரியங்கா கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியைப் பிடுங்க முயற்சித்தனர்.

குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டிருந்த பிரியங்கா காந்தி சங்கிலியை விடாமல் பிடித்துக் கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், பிரியங்கா காந்தி மற்றும் குழந்தை ஷிவானி இருவரையும் பிடித்து அருகிலிருந்த கிணற்றில் தள்ளினர். நகையை எடுத்துக்கொண்டு, இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவத்தில் குழந்தை ஷிவானி தண்ணீரில் முழ்கி உயிரிழந்தது.

கிணற்றில் தத்தளித்த பிரியங்கா காந்தி, பக்கவாட்டில் இருந்த ஒரு கல்லைப் பிடித்துக்கொண்டு விடியும் வரை இருந்துள்ளார். இன்று (ஜனவரி 25) காலை பிரியங்கா வீட்டுக்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரைக் காப்பாற்றி தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் தலைவாசல் போலீசார். பிரியங்கா காந்தியின் கணவர் வெளியூரில் வசித்து வருவதால், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon