மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 5 டிச 2020

ரஜினி மன்ற இளவரசன் நீக்கம்: கொண்டாடும் நிர்வாகிகள்- பின்னணி என்ன?

ரஜினி மன்ற இளவரசன் நீக்கம்: கொண்டாடும் நிர்வாகிகள்- பின்னணி என்ன?

“ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் இளவரசன் அவரது விருப்பத்துக்கு இணங்க அவர் வகிக்கும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்” என இன்று ஜனவரி 25 ஆம் தேதி வெளியான அறிவிப்பை வெடி வெடிக்காத குறையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.

அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் இளவரசன் நீக்கப்பட்டதற்கு ஏன் இவ்வளவு நிர்வாகிகள் கொண்டாட வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினரிடம் விசாரித்தோம். பெருமூச்சு விட்டபடியே தங்கள் குமுறல்களைக் கொட்டினார்கள்.

“ரஜினி மக்கள் மன்றத்துக்கு கடந்த வருடத் தொடக்கத்தில் வந்தவர் டாக்டர் இளவரசன். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த இளவரசன் ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்ந்தவுடன் கடலூர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அடுத்த சில மாதங்களில் இவர் மன்றத்தின் அமைப்புச் செயலாளராகவும், ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இது மக்கள் மன்ற நிர்வாகிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படி திடீரென வந்தவருக்கு இவ்வளவு பதவிகளா என்று அவரைப் பற்றி விசாரித்தபோதுதான் டாக்டர் இளவரசன் பெரும் அரசியல் தொடர்புள்ளவர் என்பதும் தெரிந்தது.

டாக்டர் இளவரசன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தங்கை குடுபத்துக்கு சம்பந்தி முறை. வீரபாண்டி ராஜா குடும்பத்துக்கும் உறவினர். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் குடுபத்தினருக்கும் இவர் வேண்டப்பட்டவர். இப்படி சமுதாய ரீதியில் பெரும் தொடர்புகள் கொண்ட டாக்டர் இளவரசன், ரஜினியின் மனைவி லதா ரஜினிக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம்தான் மன்றத்துக்கே வந்தார்.

அவர் அமைப்புச் செயலாளர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் ஆனதும்தான் பல மாவட்ட நிர்வாகிகள் அதிர்ந்தனர். ஏனெனில் ரஜினி மன்றத்துக்காக இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் உழைத்தவர்களை எல்லாம் அனாயாசமாக தூக்கி வெளியே போட்டார் இளவரசன். புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், தேனி, திருவாரூர் என்று பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் இளவரசனால் நீக்கப்பட்டனர்.

இதில் முக்கியமானவர் விழுப்புரம் ரஜினி இப்ராஹிம். மே மாதம் பொறுப்புக்கு வந்த இளவரசன் ஆகஸ்டு மாதம் விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த விழுப்புரம் இப்ராஹிமை நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்தார். இதுதான் மன்றத்தினர் இடையே யார் இந்த இளவரன் என்று பரவலாக பேசுவதற்கு வழி வகுத்தது.

காரணம் விழுப்புரம் இப்ராஹிம் ரஜினி மன்றத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இருப்பவர். இடையே மதிமுகவுக்குப் போனார். ஆனால் தன் ரசிகர்கள் கட்சியில் இருக்கக் கூடாது என்று ரஜினி கட்டளையிட்டதும் மதிமுகவில் இருந்து விலகி ரஜினி மன்றப் பணிகளை மட்டுமே தொடர்ந்தார். பாபா பட வெளியீட்டின் போது பாமகவுக்கும் ரஜினி மன்றத்தினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதில் இப்ராஹிமின் வீடு எரிக்கப்பட்டது. அப்போது ரஜினியே இப்ராஹிமை அழைத்து தைரியம் சொன்னார். அவருக்கு ஆதரவாக அறிக்கையே வெளியிட்டார். இப்ராஹிம் வீட்டின் செங்கற்களில் எல்லாம் ரஜினி என்ற ஆங்கில எழுத்தே அச்சடிக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு அவர் ரஜினி ரசிகர். இப்படிப்பட்ட மிக மூத்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை பல மாவட்டங்களிலும் இளவரசன் நீக்கியதை அடுத்துதான் இளவரசன் மீது பல பேர் ரஜினிக்கு புகார்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்” என்ற நிர்வாகிகள் தொடர்ந்தனர்.

“ இதுபற்றி இளவரசனிடம் கேட்டால், ‘மக்கள் மன்றத்துல எத்தனை மாவட்டம் இருக்கு, எவ்வளவு நிர்வாகிகள் இருக்காங்கனு கூட ரஜினி சாருக்கு தெரியாது. அவர் கிட்ட பேசிட்டு அவரோட அனுமதியின் பேர்லதான் நடவடிக்கை எடுக்குறேன். வேணும்னா ரஜினி சார்கிட்ட சொல்லிக்கோ’ என்ற ரீதியிலேயே பதில் கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் குறிப்பிட்டு சுதாகரிடம் புகார்கள் குவிய டிசம்பர் மாத மத்தியில்தான் எல்லாம் ரஜினியிடம் சென்று சேர்ந்திருக்கிறது.

இதையடுத்து டிசம்பர் மாத கடைசியிலேயே இளவரசன் நீக்கம் என்று செய்திகள் வந்தன. ஆனால் அதிகாரபூர்வ நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த நிலையில்தான் இன்று இளவரசன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இன்னும் கொஞ்ச காலம் இருந்திருந்தால் இளவரசன் ரஜினி மக்கள் மன்றத்தை இளவரசன் மக்கள் மன்றம் என்று கூட மாற்றியிருப்பார். இப்போதாவது ரஜினி விழித்துக்கொண்டாரே... இளவரசனால் நீக்கப்பட்ட மன்றத்தின் சீனியர்களை எல்லாம் மீண்டும் ரஜினி சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் இளவரசனை நீக்கியதற்கு அர்த்தம் இருக்கும்” என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.

ரஜினி இளவரசனை பெரிதும் நம்பினார். அதனால்தான் அவரை அழைத்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அவரது வேண்டுகோளுக்கு இணங்கவே விடுவிக்கப்படுகிறார் என்றும் அறிவிப்பு வெளியிட வைத்தார் என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற தலைமையில்!

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon