மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்பு முடிவுகள்!

மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்பு முடிவுகள்!

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான பணிகள் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகால பாஜக. ஆட்சியில் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

ஏபிபி மற்றும் சி-வோட்டர்ஸ் இணைந்து தேசத்தின் மனநிலை என்னும் தலைப்பில் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில், மக்களவைத் தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறியுள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 233 இடங்களே கிடைக்கும் என்று சர்வே முடிகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 167 இடங்கள் கிடைக்கும் என்றும் மற்ற கட்சிகள் 143 இடங்களில் வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் வாரியாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் பின்வருமாறு

நாட்டிலேயே அதிகத் தொகுதிகள் உள்ள உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 51இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 80 தொகுதிகள் உள்ள இம்மாநிலத்தில் கடந்த முறை பாஜக 71 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 34 இடங்களும், காங்கிரஸுக்கு 1 இடமும் பாஜகவுக்கு 7 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் அமைக்கவில்லை என்றாலும் அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.

பிகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக - ஐஜத கூட்டணி 35 இடங்களிலும், காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்திலுள்ள 13 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில், பாஜக 1 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்திலுள்ள 29 தொகுதிகளில் பாஜக கூட்டணி 23 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணி 6 இடங்களையும் கைப்பற்றும். குஜராத் மாநிலத்தில் 26 இடங்களில் 24 இடங்களை பாஜக கூட்டணியும் 2 இடங்களில் காங்கிரஸும் வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

48 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 28 இடங்களும் பாஜக கூட்டணி 20 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளில் பாஜக 7 இடங்களிலும் காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றிபெறும் என்றும், ஒடிசாவில் உள்ள 21 தொகுதிகளில் பிஜு ஜனதா தளம் 9 இடங்களும் பாஜக 12 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon