மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது?

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது?வெற்றிநடை போடும் தமிழகம்

டாப் டென் லிஸ்ட் ரெடி!

ஜாக்டோ ஜியோ போராட்டம் நான்காவது நாளாகத் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகள் குறித்த டாப் டென் லிஸ்ட்டை தயார் செய்து வருகின்றனர் மாவட்டக் காவல் துறையினர்.

நாளை (ஜனவரி 26) நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் நாளை எத்தனைப் பள்ளிகள் திறக்கப்படும்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜாக்டோ ஜியோ போராட்டம் நான்காவது நாளாக இன்று தமிழகம் முழுவதும் தொடர்கிறது. ஒவ்வொரு ஊரிலும் இதற்கான ஆதரவு பெருகி வரும் நிலையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது தமிழக அரசு. முதல் கட்டமாக, இன்று (ஜனவரி 24) மாவட்டக் காவல் துறை மூலமாகப் போராட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் பத்து பேரின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களைத் தயார் செய்ய வேண்டுமென்ற உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகக் காவல் துறை தலைமையானது, இது பற்றி மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்களுக்கும், மாநகரக் காவல் துறை ஆணையர்களுக்கும் உத்தரவு அனுப்பியது. அவர்கள் இட்ட உத்தரவின்படி, போலீசார் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்படி, 10 முதல் 15 நிர்வாகிகளின் புகைப்படங்கள், அவர்களது பெயர்கள், ஊர், வயது, திருமணம் ஆனவரா, ஆகாதவரா, எத்தனை குழந்தைகள், என்ன பதவி, பணி செய்யும் இடம், அவர்கள் சார்ந்துள்ள சங்கம், வசிக்கும் இடம், சாதி என அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் உத்தரவையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆணையர்களிடம் தரப்பட்டுள்ள இந்த பட்டியலில் இடம்பெற்றவர்கள் கைது செய்யப்படுவார்களா, இல்லையா என்பது தெரியவரும். ஜாக்டோ ஜியோ முக்கிய நிர்வாகிகளை நசுக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறித்து, மின்னம்பலத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளைச் சிறைக்கு அனுப்பத் திட்டம் என்ற தலைப்பில் விரிவான செய்திகளைப் பதிவு செய்திருந்தோம்.

இன்று மதியம் மாநிலம் முழுவதுமுள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் ஒன்று சொல்லப்பட்டது. இதனைக் கேட்டதும் அனைத்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர்களும், மாநகர ஆணையர்களும் கொதித்துவிட்டனர் என்கிறது காவல் துறை வட்டாரம். “மாவட்டந்தோறும் சராசரியாக 10 முதல் 15 பேர் வரை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்களின் லிஸ்ட் எடுக்கச் சொன்னார்கள். இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 2,000 பேர் வரை மறியல் நடத்திக் கைதாகியுள்ளனர். திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள இவர்களில் இருந்து வெறுமனே பத்து பேரை மட்டும் கைது செய்துவிட்டு, மற்றவர்களை விடுவிக்கச் சொல்கிறது அரசு” என்று வருத்தப்பட்டார் கோவையைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர். அந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், எவ்வாறு எதிர்கொள்வது என்பது அவரது கேள்வி.

இந்த டாப் டென் லிஸ்ட்டில் நாடார், வன்னியர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் இடம்பெற்றிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. “நாளை குடியரசுத் தின விழா என்பதால் போலீஸ் ஸ்ட்ரென்த் குறைவாக இருக்கிறது. ஆனாலும், மேல் அதிகாரிகள் உத்தரவை அமல்படுத்துவது கீழ்மட்ட அதிகாரிகளின் கடமை அல்லவா? நாளையும் நாளை மறுநாளும் விடுமுறை என்பதால், கைது செய்து சிறைக்கு அனுப்பினால் ஜாக்டோஜியோ நிர்வாகிகள் ஜாமீன் ஏற்பாடு செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ரிமாண்ட் மூலம் எதிரிகளை குற்றவியல் நீதித் துறை நடுவரிடம் அழைத்துப் போகும்போது, அவர் ரிமாண்ட் கொடுப்பாரா என்ற குழப்பமும் நிலவுகிறது” என்று தெரிவித்தார் அந்த அதிகாரி.

போராடுபவர்களைச் சிறையில் அடைப்பதால் நிரந்தரத் தீர்வு எப்படிக் கிடைக்கும் என்பதே, போராட்டக் களத்தில் இருப்பவர்களின் கேள்வி!

வெள்ளி, 25 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon