மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஆணையத்துக்குள் ஓபிஎஸ் - வெளியே டெல்லி பூனைக்குட்டி!

ஆணையத்துக்குள் ஓபிஎஸ் - வெளியே டெல்லி பூனைக்குட்டி!

மின்னம்பலம்

அதிமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர்! பகுதி - 14

ஆரா

“வருவாரோ... வர மாட்டாரோ... அவர் மோட்டார் வண்டியிலே... தருவாரோ... தர மாட்டாரோ... அவர் தங்கக் கையினாலே...’’

நாட்டுப் புறப் பாடல்களில் புகழ்பெற்ற விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனின் பாடல்களில் மேலே குறிப்பிட்ட பாடலும் ஒன்று. பட்டிதொட்டி எங்கும் ஒலித்த இந்தப் பாடலை ஆறுமுகசாமி ஆணையத்தின் வாசலில் நின்று பாடிக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர்.

அதிமுகவில் என்ன நடக்கிறது என்பதை அறிய வேண்டுமென்றால் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு யார் யார் வந்தார்கள், என்ன சொன்னார்கள் என்பதை எல்லாம் அறிந்தால் போதும்.

கடந்த 17-8-2017அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கேட்டார்கள், பின் விசாரணை ஆணையம் கேட்டார்கள். தினகரனை வெளியேற்றிவிட்டு அணிகள் இணைப்புக்கு டெல்லி உத்தரவிட்ட நிலையில் அதற்காக அன்றைய தினமே ஜெ.மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தை அமைத்தார் முதல்வர்.

அந்த அரசு அறிவிப்பில் இடம்பெற்றிருந்த வாசகங்களில் மிக முக்கியமானவை.

“மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 5-12-2016 அன்று தன் இன்னுயிரை நீத்தார்கள். பல்வேறு அமைப்புகள் மற்றும் பல தரப்பினரிடமிருந்தும் அம்மா அவர்களின் இறப்பு குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அம்மா அவர்களின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்” என்பதுதான் அந்த வாசகம்.

ஆக, ஜெயலலிதா உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்னுயிரை நீத்தார்கள் என்று அவர் இறப்புக்கான காரணத்தை மிகத் தெளிவாக சொல்லிவிட்டு, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார் முதல்வர் எடப்பாடி.

அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் முனுசாமி, ‘’இன்னும் எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறவில்லை. நாங்கள் அம்மா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டோம்" என்றெல்லாம் கூறினார்.

தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி, ‘’நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஒரு வாய்ப்பு இது’’ என்றார்.

ஆனால் அணிகள் இணைந்தன, ஆணையத்துக்கான நீதிபதியாக ஆறுமுகசாமி நியமிக்கப்பட்டார். இதில் என்ன கொடுமை என்றால் விசாரணை ஆணையத்தை அமைக்கச் சொல்லி வலியுறுத்திய ஓ.பன்னீர் செல்வம் இன்றுவரை ஆணையத்தால் விசாரிக்கப்படவே இல்லை.

2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று (28-1-2019) வரை ஓ.பன்னீர் செல்வம் விசாரணைக்காக ஆஜராகவில்லை. மெல்ல மெல்ல கடந்த 13-12-2018 அன்று ஆணையம், "வரும் டிசம்பர் 20ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்காக ஆஜராக வேண்டும்" என்று சம்மன் அனுப்பியது. ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை. இதற்கு மேலும் சில தினங்கள் அவர் ஆஜராவாதாக இருந்தது. ஆனால் ஓ.பன்னீர் ஆஜராகவில்லை. லேட்டஸ்டாக நாளை (29-1-2019) மீண்டும் ஓ.பன்னீர் ஆஜராக வேண்டும் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

“அம்மா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று யாரையும் விட முதன் முதலில் கூறியவர் ஓ.பன்னீர்செல்வம்தான். அணிகள் இணைப்புக்காக அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு ஆறுமுகசாமி ஆணையமும் அமைக்கப்பட்டது.

உண்மையிலேயே ஓ. பன்னீர் தான் வைத்த கோரிக்கையில் உறுதியாக இருந்திருந்தால், ஆணையம் அழைக்காமலேயே ஆணையத்தின் முன் ஆஜராகி தனக்குத் தெரிந்த அத்தனை உண்மைகளையும் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லியிருந்தால் ஆணையம் என்றைக்கோ தனது விசாரணையை முடித்திருக்கும். ஆனால் ஆணையம் தன்னை அழைத்தபோதும் அங்கே செல்லாமல் ஓ.பன்னீர் செல்வம் தவிர்த்து வருவது ஏன்? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது பன்னீர்தான் முதல்வர் பொறுப்பை கவனித்தார். ஜெயலலிதா காலமான உடனே முதல்வராகப் பொறுப்பேற்று டிசம்பர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். அவர் ஏன் இதுவரை ஆணையத்தில் ஆஜராகவில்லை” என்று கேட்பவர்கள் வேறு யாருமல்ல தர்ம யுத்தம் நடத்திய பன்னீரின் ஆதரவாளர்கள்தான்.

“பன்னீர் ஆஜரானால் அவரிடம் சரமாரியாக குறுக்கு விசாரணை நடத்தத் தயாராகிறது சசிகலா தரப்பு. அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது மத்திய அரசின் கரங்கள் என்ன செய்தன என்றும் கேட்கப்படலாம். அதற்கு பன்னீர் பதில் சொல்லலாம். அந்தக் கேள்விகளுக்கு பன்னீர் அளிக்கும் பதிலில் டெல்லி பூனைக்குட்டியும் வெளியே வரலாம். அந்த டெல்லி பூனைக்குட்டி வெளியே வந்தால் அதிமுகவில் பற்பல மாற்றங்கள் நடக்கலாம். அதனால்தான் ஓ.பன்னீர் ஆஜராவது தாமதமாகிறது” என்கிறார்கள் தினகரன் தரப்பினர்.

இன்று (29-1-2019) ஓ.பன்னீர், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஓபனாக பேசினால் அதிமுகவிலும் மாற்றங்கள் நடக்கலாம்.

(அடுத்த பயணம் புதனன்று)

மினி தொடர் - 1

மினி தொடர் - 2

மினி தொடர் - 3

மினி தொடர் - 4

மினி தொடர் - 5

மினி தொடர் - 6

மினி தொடர் - 7

மினி தொடர் - 8

மினி தொடர் - 9

மினி தொடர் - 10

மினி தொடர் - 11

மினி தொடர் - 12

மினி தொடர் - 13

திங்கள், 28 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon