மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

சிறப்புக் கட்டுரை: கடன் வாங்கிப் படிக்கலாமா?

சிறப்புக் கட்டுரை: கடன் வாங்கிப் படிக்கலாமா?

புதிய நிதிக் கதைகள் 13 – முருகேஷ் பாபு

‘கிஷோர்’ என்ற பெயரை உச்சரித்தபோது அரங்கமே அதிர்ந்தது. நெகிழ்ச்சியான மனநிலையில் மேடையேறினான் கிஷோர். பட்டம் படித்தவன் என்று சொன்னால் நம்புவதற்குக் கஷ்டம். அப்படி இருந்தது அவன் தோற்றம்.

மிக எளிய உடைகள், ஒட்டிய கன்னங்கள், தேய்ந்து பழசாகிப்போன காலணிகள் என்று அவனுடைய தோற்றமே அவன் பின்னணியைச் சொன்னது.

மைக்கின் முன்னால் நின்று அறிவிப்பாளர் உற்சாக வார்த்தைகளில் பேசினார். “இந்தக் கல்லூரியில் மட்டுமல்ல… இந்தப் பல்கலைக்கழகத்திலேயே தங்கப் பதக்கம் பெறத் தகுதியானவர் என்று நாம் கிஷோரைச் சொல்லலாம். எல்லாத் தேர்வுகளிலுமே அவர் முதல் மாணவர்தான். இப்படி ஒரு மாணவர் எங்கள் கல்லூரியைச் சேர்ந்தவர் என்பது எங்களுக்குப் பெருமையே! இப்போது பல்கலைக்கழக வேந்தரான மேதகு ஆளுநர் அவர்கள் கிஷோருக்கு பதக்கம் அணிவிப்பார்.”

மொத்த அரங்கமே எழுந்து நின்று கைத்தட்ட, ஆளுநர், கிஷோர் கழுத்தில் பதக்கத்தை அணிவித்தார். எல்லோரும் ஆவலாக எதிர்பார்க்க, கிஷோர் மைக் முன்னால் வந்து நின்றான்.

“அனைவருக்கும் வணக்கம். என்னுடைய இந்த வெற்றியை திரு.கண்ணபிரானுக்குச் சமர்ப்பிக்கிறேன்” என்று சொல்லி நிறுத்த, எல்லோருக்கும் யார் அந்தக் கண்ணபிரான் என்று ஆச்சரியம் எழுந்தது. அதை அறிந்தவன்போலத் தன் பேச்சைத் தொடர்ந்தான் கிஷோர்.

‘‘யார் அந்தக் கண்ணபிரான் என்று சொல்லும் முன் என் குடும்பச் சூழலைச் சொல்ல விரும்புகிறேன். கையகலம்கூட நிலம் இல்லாத ஏழை கிராமத்துக் குடும்பம் எங்களுடையது. என் தந்தை விவசாயக் கூலி. விவசாயிகளுக்கே வேலை இல்லாத இன்றைய சூழலில் விவசாயக் கூலிகளின் நிலை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என் தந்தையும் எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருந்தார். அதன் பலனாக அவர் கொண்டுவரும் சொற்பப் பணம் எங்களின் அன்றாடத் தேவைகளுக்கே போதாது.

என் தாயார் வீட்டில் இட்லி செய்து விற்றதன் மூலம் எங்கள் குடும்பம் பசியில்லாமல் வாழ முடிந்தது. இந்தச் சூழலில் நான் பன்னிரண்டாம் வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்றால்தான் எனக்குப் பின் உள்ள தம்பி தங்கைகளைப் படிக்கவைக்க முடியும். தேர்வு எழுதிய கையோடு ஒரு துணிக்கடையில் வேலையும் தேடிக்கொண்டேன். தேர்வு முடிவுகள் வந்தன. மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத் தேறியிருந்தேன். உள்ளூர் பத்திரிகைகளில் எல்லாம் புகைப்படத்துடன் என்னைப் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது.

அடுத்த நாள் கடைக்கு வந்திருந்த கண்ணபிரான் என்னைப் பார்த்தார். ‘மாவட்டத்திலேயே முதல் மாணவன் நீ… இங்கு என்ன செய்கிறாய். நாளை என்னை வந்து பார்’ என்று தன் விசிட்டிங் கார்ட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அப்போதுதான் கண்ணபிரான் சார் இந்த ஊரில் உள்ள வங்கியில் மேலாளர் என்று எனக்குத் தெரியவந்தது…”

கிஷோர் சற்று இடைவெளி கொடுத்து, தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தான்.

“அவரைச் சந்தித்த நாள் என் வாழ்வில் பொன்னாள். அவர்தான் கல்விக் கடன் பற்றி எனக்கு எடுத்து சொன்னார். கல்லூரி படிப்புக்கான முழுமையான கட்டணச் செலவுகளை வங்கியில் கடனாகப் பெற்றுச் செலுத்த முடியும் என்றும் பின்னாளில் எளிய முறையில் அந்தக் கடனைத் திரும்பச் செலுத்தலாம் என்றும் அவர் சொன்னது, என் வாழ்வில் புதிய கதவுகளைத் திறந்தது. பணமில்லாததால் ஒருவருடைய கல்வி தடைபடக் கூடாது என்ற அவருடைய உயர்ந்த நோக்கம் பாராட்டுக்குரியது. இன்று, முழுமையான பட்டதாரியாக உங்கள் முன்னால் நிற்கிறேன். என்னுடைய இந்த நிலைக்குக் காரணமான ஐயா கண்ணபிரானுக்கு மீண்டும் என் நன்றிகள்” என்று கரம் குவித்து வணங்கினான்.

பட்டமளிப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தொழிலதிபரான ஏ.என்.ராஜன் எழுந்து வந்து மைக்கைப் பிடித்து, “கிஷோர் போன்ற நம்பிக்கையூட்டும் இளைஞனை மாணவனாகப் பெற்றது கல்லூரிக்குப் பெருமை என்றால், அவரை எங்கள் நிறுவனத்தில் இணைத்துக்கொண்டு நாங்களும் அந்தப் பெருமையைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்… எங்களோடு அவர் இணைந்து பயணிப்பதன் மூலம் இருவருமே பயனடைய முடியும்.. வெல்கம் கிஷோர்…’ என்றார்.

மீண்டும் அரங்கம் அதிர்ந்தது.

கல்விக் கடன் - சில தகவல்கள்

1. பணம் இல்லாததால் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படக் கூடாது என்பதுதான் கல்விக் கடனின் அடிப்படை நோக்கம்.

2. தேசிய மயமாக்கப்பட்ட எல்லா வங்கிகளும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. இதை எல்லா வங்கிகளும் பின்பற்ற வேண்டும்.

3. கல்விக் கடன் வழங்கப் பத்திரங்களைப் பிணையாகக் கேட்கக் கூடாது என்பதும் அரசாங்க உத்தரவு. எந்த அடிப்படை வசதியும் இல்லாத மாணவன்கூடக் கல்வி பெற வேண்டும் என்பதே இதன் உட்பொருள்.

4. ஒரு மாணவன் வரும் கல்வியாண்டில் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் எவ்வளவு என்பதை முன்கூட்டியே வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.

5. ஒவ்வொரு வங்கிக்கும் கல்விக் கடன் வழங்கக் குறிப்பிட்ட அளவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கலாம். எனவே, மாணவர்கள் தாமதம் செய்யாமல் விண்ணப்பிக்க வேண்டும்.

6. கட்டணங்களை வங்கிக் கடன் பெற்றுத்தான் செலுத்த போகிறோம் என்பதைக் கல்லூரியில் தெளிவாக முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும்.

7. கல்விக் கடன் பெற்றுத் தருகிறோம் என்று வரும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். நேரடியாக வங்கிகளை நாடுங்கள்.

8. சில தனியார் வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதில் ஆர்வம்காட்டுவதில்லை. ஆனாலும் நாம் வற்புறுத்திப் பெறலாம்.

9. கல்விக் கடனுக்கான வட்டி விகிதம், திரும்பச் செலுத்துவதற்கான கால அளவு போன்றவற்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்வது நல்லது.

10. வெளிநாட்டில் கல்வி பயில்வது போன்ற விஷயங்களுக்குக் கடன் உதவி கிடைக்குமா என்பதை அறிந்துகொள்வது நல்லது.

கடன் வாங்கி உல்லாசமா?

செவ்வாய், 29 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon