மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

டிஎஸ்பி மீது முன்னாள் எம்.எல்.ஏ புகார்!

டிஎஸ்பி மீது முன்னாள் எம்.எல்.ஏ புகார்!

லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) முத்தழகு மீது திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின். இவர் நேற்று (ஜனவரி 29) சென்னை காவல் ஆணையரகத்தில் டிஎஸ்பி முத்தழகு என்பவர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இந்தப் புகார் மனுவை அவர் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில், “நான் திமுக சார்பில் மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். ஐந்தாண்டுக் காலம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன்.

பாண்டிபஜார் காவல் சரகத்துக்கு உட்பட்ட ஜிவிஆர் ஏசியா ட்ரேடு கன்சார்டியம் இன்ஃப்ரா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம் என்பவர் எனக்குத் தொழில் நிமித்தமாக ரூ.35 லட்சம் தர வேண்டியிருந்தது. இதைக் கேட்டு பலமுறை அவருடைய அலுவலகத்துக்குச் சென்றுள்ளேன். அதுபோலவே 13.04.2018 அன்றும் எனது நண்பர்களுடன் நான் சண்முகம் அலுவலகத்துக்குச் சென்றேன். ஆனால், நான் அவரை பணம் கேட்டு மிரட்டியதாக சண்முகம் என் மீது பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து காவல் நிலையம் சென்ற என்னிடம் டிஎஸ்பி முத்தழகு விசாரிப்பார் என்று உதவி ஆய்வாளர் புஷ்பா கூறினார். இருப்பினும் என்னையோ, புகார் கொடுத்த சண்முகத்தையோ டிஎஸ்பி முத்தழகு விசாரிக்கவில்லை. ஆனால், நான் கைது செய்யப்பட்டதாக வதந்திகளைப் பரப்பினார்கள். என்மீது நடவடிக்கை எடுக்க சண்முகத்திடம் முத்தழகு பேரம் பேசியுள்ளதாகச் சந்தேகப்படுகிறேன்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “டிஎஸ்பி முத்தழகு வேறொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரிடம், அவரைக் கைது செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். எனவே அதுபோலவே எனக்கு எதிராகவும், இதைப்போலவே ஒரு மனுவை வாங்கி என் மீதும் நடவடிக்கை எடுக்க முயற்சி செய்திருப்பதாக நான் சந்தேகப்படுகிறேன். அந்த அடிப்படையில் அவரை விசாரிக்குமாறு காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளேன்” என்றார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon