ராகுலின் வாக்குறுதி போலியானதா? - மாயாவதி

ராகுலின் குறைந்தபட்ச ஊதிய வாக்குறுதி போலியானதா என்று மாயாவதி கேள்வியெழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் உறுதிமொழியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வறுமை ஒழிப்பு மற்றும் மக்கள்நலத் திட்டங்களை கொண்டுவந்தால் தேசிய அளவிலும் நடக்க வாய்ப்புள்ளது என மக்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கையாவது வரும் என்று ராகுலுக்கு மாயாவதி அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மக்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் காங்கிரஸின் உறுதிமொழி மக்களிடையே வியப்பையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது” என்று மாயாவதி தெரிவித்துள்ளார். காங்கிரஸின் வறுமை ஒழிப்பு உறுதிமொழி, ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.15 லட்சம் பணம் போடும் பாஜகவின் உறுதிமொழி அல்லது ‘அச்சே தின்’ போன்ற உறுதிமொழிகளைப் போல இதுவும் ஒரு கொடூரமான கேலியா என மாயாவதி கேள்வியெழுப்பியுள்ளார்.