மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

ஆறுமுக சாமி ஆணையம்: ஹோம் வொர்க் செய்கிறாரா ஓ.பன்னீர்?

ஆறுமுக சாமி ஆணையம்: ஹோம் வொர்க் செய்கிறாரா ஓ.பன்னீர்?

அதிமுகவில் என்ன நடக்கிறது? மினி தொடர்-15

ஆரா

ஒரு காலத்தில் ஜெயலலிதாவை வாய்தா ராணி என்று திமுகவினர் அழைத்தார்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா விசாரணையை இழுத்தடிப்பதாக வாய்தா ராணி என்ற வார்த்தைகளின் மூலம் குற்றம் சாட்டியது திமுக. ஆனால் இன்றைக்கு அதிமுகவினரே துணை முதல்வர் ஓ,பன்னீர் செல்வத்தை, ‘வாய்தா ராஜா’ என்று அழைக்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

ஜனவரி 29 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி தான் தர்ம யுத்தம் தொடுப்பதற்கான சூழல்களையும், ஜெ, மரணத்தில் நிலவும் மர்மத்தையும் உடைத்துவிடுவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தின் வருகை மீண்டும் பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

மடியில் கனமில்லை அதனால் எங்களுக்கு வழியில் பயமில்லை என்று அதிமுகவில் ஒவ்வொரு பிரிவினரும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் என்ன காரணத்துக்காக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதைத் தள்ளிப் போடுகிறார். அவரை இருமுறை முதல்வராக்கி அழகுபார்த்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பன்னீரே போராடிப் பெற்ற அமைப்புதான் இந்த ஆறுமுகசாமி ஆணையம். அப்பேற்பட்ட நீதி அமைப்பை, உண்மையைக் கண்டறியும் ஓர் அமைப்பை ஏன் சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை? இதெல்லாம் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலேயே எழுந்திருக்கும் கேள்வி.

ஆணையத்தில் ஜனவரி 29 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை ஓ,பன்னீர் செல்வம் ஆஜராக வேண்டும் என்ற முந்தைய நிலைமையில், ஜனவரி 25 ஆம் தேதி வெள்ளிக் கிழமை ஓ.பன்னீர் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஒரு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்கிறார். அதாவது இதற்கு முன் ஆணையத்தில் அளித்த விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் தம்பிதுரை உள்ளிட்ட சாட்சியங்களின் விவரங்கள், எழுத்துபூர்வமான விவரங்கள் தமக்குத் தேவை என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஜனவரி 28 ஆம் தேதி திங்கள் கிழமை அந்த மனுவை திடீரென அவர் வாபஸ் வாங்கினார்.

ஆணைய வாசலிலேயே இதை செய்தியாளர்களிடம் குறிப்பிட்ட சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்,

’’ஒரு சாட்சி விசாரிக்கப்படும்போது அந்த வழக்கின் இன்னொரு சாட்சி நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அந்த சாட்சி என்ன நடக்கிறது என்று யூகித்து அடுத்த சாட்சி தயாராகிவிடக் கூடாது. தன் சொந்த கருத்துகளையே தனக்கு தெரிந்ததையே ஒரு சாட்சி சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் தனக்கு முன்னாள் சாட்சியம் அளித்த தம்பிதுரை, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் சாட்சியங்களை ஓ.பன்னீர் தரப்பு தங்களுக்கு அளிக்குமாறு கேட்டதே தவறு இதை முன் வைத்து நாங்கள் வாதாடத் தயாராக இருந்த நிலையில்தான் அந்த மனுவை ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞரே வாபஸ் வாங்கிவிட்டார்.

ஆனபோதும் அப்பல்லோ மருத்துவக் குழு அமைக்குமாறு வைத்த கோரிக்கை ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அப்பீல் செய்வார்களோ என்ற சூழலால் ஆணையமே ஓ,பன்னீர் செல்வத்தின் விசாரணையை பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் விசாரணை ஆணையத்தில் பன்னீர் ஆஜராக தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் சசிகலாவுக்கான சாதகங்கள் தள்ளி வைக்கப்படுகின்றன என்றே அவர் கருதுவதாகவும் கூறினார்.

ஆம்...ஓ. பன்னீர் செல்வம் ஆறுமுக சாமி ஆணையத்தில் ஆஜராக வந்திருந்தால் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் இறந்து போனதுவரையிலான அனைத்து நிகழ்வுகளிலும் நடந்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும். அந்த முடிச்சுகள் அவிழ்ந்தால் ஒன்று சசிகலா மீதான சந்தேகம் உறுதிப்படுத்தப்படும் அல்லது சசிகலா மீதான சந்தேகம் தூள்தூளாக்கப்படும். பன்னீர் அந்த காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உட்பட ஒவ்வொருவர் பற்றியும் பேசிய பேச்சுகளை ஆதாரத்தோடு எடுத்து வைத்திருக்கும் சசிகலா தரப்பினர் அவரிடம் கேள்விகளை வீசி பதில்களைப் பெற தயாராக இருக்கின்றனர்.

ஆனால் ஏன் பன்னீர் பதுங்குகிறார்? தான் சாட்சியம் அளிப்பதற்கு முன்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தம்பிதுரை ஆகியோர் என்ன சாட்சியம் அளித்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஏன் விரும்பினார் பன்னீர்? அவர்களின் சாட்சியத்துக்கு ஏற்ப தன் கருத்தை மாற்றி அமைக்க ஹோம் வொர்க் செய்தாரா பன்னீர்? இப்படிப்பட்ட ஒரு மனு சரியாக இருக்காது என்று யாரோ சொன்ன பின் அந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டாரா பன்னீர்?

அப்படியெனில் ஆணையத்தில் ஆஜராவதற்கு முன் பன்னீர் ஹோம் வொர்க் செய்ய வேண்டிய அவசியம் என்ன? பிப்ரவரி 5 ஆம் தேதி உடைபடுமா உண்மைகள்? அதிமுக காத்திருக்கிறது!

(பயணம் தொடரும் )

மினி தொடர்-14

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

புதன் 30 ஜன 2019