மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

இழப்பீடு பட்டியலைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவு!

இழப்பீடு பட்டியலைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உத்தரவு!

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் யார் யாருக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்கிற பட்டியலைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், நாகை, திருவாரூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் தாக்கியது. இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மீனவக் குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5,000, முழுவதும் சேதமடைந்த குடிசை வீட்டுக்கு ரூ.10,000, பாதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4,100 எனப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழக அரசு.

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்து வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, “கஜா நிவாரணமாக இதுவரை எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு மீண்டும் நேற்று (ஜனவரி 29) விசாரணைக்கு வந்தபோது, இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டதாக மாநிலப் பேரிடர் மீட்புக் குழு ஆணையர் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகை முறையாகச் சென்றடையவில்லை என மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், ”கஜா புயலால் பாதிக்கப்பட்டோரில் யார் யாருக்கு எதற்காக, எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை வட்டாட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், பொதுமக்கள் கூடும் இடங்களில் பார்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது என்கிற பட்டியலை பிப்ரவரி 12ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

செவ்வாய், 29 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon