மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

தமிழுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்!

தமிழுக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்!

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்து அமெரிக்காவின் வடக்கு கேரோலினா மாகாண அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கேரோலினா மாகாணத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். இம்மாதமான ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என்று கேரோலினா தமிழ்ச்சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்ற கேரோலினா மாகாண அரசு ஜனவரியை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை மாகாண ஆளுநர் ராய் கூப்பர் வெளியிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பில், “வடக்கு கேரோலினாவில் உள்ள தமிழ் சமூகம் மாகாணத்தின் கலாச்சாரத்திற்கும், மக்கட்தொகைக்கும் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இதில் தமிழ் மொழியை பாதுகாப்பதும், ஊக்குவிப்பதும் அடங்கும்.

இந்தியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் நமது நாடு முழுவதும் பல சமூகங்களால் பரவலாக பேசப்படும் மொழியாக தமிழ் உள்ளது. உலகின் மிகவும் பழைமையான மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் தமிழ் சமூகத்தினர் தைப் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். நான்கு நாள் அறுவடைத் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது. ஆகையால் நமது மாகாணத்திற்கு தமிழ் சமூகம் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுடன் இணைந்து தைப் பொங்கலை வடக்கு கேரோலினா மாகாணம் கொண்டாடுகிறது. ஆக, ஜனவரி மாதத்தை வடக்கு கேரோலினாவின் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக நான் அறிவிக்கிறேன்” என்று ராய் கூப்பர் தெரிவித்துள்ளார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon