மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

சட்டத்தோடு விளையாடாதீர்கள்: கார்த்தி சிதம்பரத்துக்கு எச்சரிக்கை!

சட்டத்தோடு  விளையாடாதீர்கள்: கார்த்தி சிதம்பரத்துக்கு எச்சரிக்கை!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், இன்றைய உத்தரவின் போது சட்டத்தோடு விளையாடாதீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2007ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, சிதம்பரம் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐயும், அமலாக்கத் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் அதற்கு அனுமதி அளிக்குமாறு கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை, கடந்த 28ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதோடு, கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை நடத்தும் தேதிகளை தெரிவிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது.

இவ்வழக்கு இன்று (ஜனவரி 30) விசாரணைக்கு வந்த போது, மார்ச் 5,6,7, மற்றும் 12ஆம் தேதிகளில் அமலாக்கத் துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அப்போது, ”நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் சட்டத்தோடு விளையாடாதீர்கள் என்று எச்சரித்ததோடு, ரூ.10 கோடி நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு வெளிநாட்டுக்கு செல்லுங்கள்” என்று கார்த்தி சிதம்பரத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon