மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 20 ஜன 2021

பள்ளிகளின் சிறுபான்மை அந்தஸ்து ரத்து!

பள்ளிகளின் சிறுபான்மை அந்தஸ்து ரத்து!

50 சதவிகித சிறுபான்மையின மாணவர்களைச் சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சிறுபான்மை பள்ளிகளுக்கு அந்தஸ்து வழங்குவதற்கான கூடுதல் விதிகளை வகுத்து, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன்படி, சிறுபான்மை பள்ளிகளில் 50 சதவிகித சிறுபான்மையின மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்றும், இந்த மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பள்ளிக்கல்வித் துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும் அந்தஅரசாணையில் கூறப்பட்டிருந்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, பிரான்சிஸ்கன் மிஷினரீஸ் ஆஃப் மேரி கல்வி நிறுவனம் உள்பட 140 கல்வி நிறுவனங்களின் சார்பில்சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று (ஜனவரி 30) நீதிபதி டி.ராஜா விசாரித்தார். தமிழகம் முழுவதும் உள்ள 2,500 பள்ளிகளை நிர்வகிக்கும் இந்த அமைப்புகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுபான்மை பள்ளிகள்தொடங்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் வழங்கப்பட்ட உரிமையைத் தடுக்கும் வகையில் தமிழக அரசின் அரசாணை உள்ளதால், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையச் சட்டத்தின் படி, சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறி, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

தகுதியான சிறுபான்மையின மாணவர்களைச் சேர்த்து கொள்வதாக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் அளித்த உத்தரவாதத்தைப் பள்ளிகள் மீறும்பட்சத்தில், தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையத்திடம் மாநில அரசு புகார் தெரிவிக்கலாம் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon