மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

வல்லுறவின் வேதனையைத் தாண்ட முடியுமா? - பெருந்தேவி

வல்லுறவின் வேதனையைத் தாண்ட முடியுமா? - பெருந்தேவி

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலில் கங்காவின் உருமாற்றம்

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் பற்றிய கட்டுரைகளில் என் கடைசிக் கட்டுரை இது. பல்வேறு கவனச் சிதறல்களால் ஒரு மாதமாக எழுத முடியாமல் போய்விட்டது. ஆனால், சென்ற வாரம் திடீரென ஒன்று நடந்தது. வாழ்க்கை புனைவைவிட மர்மமானது என்று இன்னொரு முறை அறிவிக்கப்பட்டது.

நியூயார்க்கில் ஒரு விருந்தில் எழுபதுகளில் இருக்கும் ஒரு பெண்மணியைச் சந்தித்தேன். சென்னையைச் சேர்ந்தவர். நவீனத் தமிழ் இலக்கியத்தோடு அவ்வளவாகப் பரிச்சயமில்லாதவர். என்னை வாசிக்கும் தமிழக சிநேகிதர் ஒருவர் அவரிடம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ பற்றிய என் மின்னம்பலம் கட்டுரைகளைக் குறிப்பிட்டார். உடனே அந்தப் பெண்மணி ‘அது உண்மையான கதை’ என்றார் என்னிடம். அந்தப் பகுதியில் வசித்தவர் அவர். எங்கே நடந்தது அந்தச் சம்பவம் உள்ளிட்ட சில தகவல்களைத் தந்தார். ஒருவகையில் அதை நேரடியாக அறிந்தவர் அவர்.

மேற்கொண்டு என்னால் இதுகுறித்த தகவல்களை வெளியிட இயலாது. ஆனால், அந்தக் காலகட்டத்தின், கதைத் தருணத்தின் ஒரு முக்கிய சாட்சி பார்வையாளரான என்னிடம் பேசியதாக உணர்ந்தேன். ரத்தமும் சதையுமாக எழுத்து என் முன் காட்சியளித்த அதிவிநோத உணர்வு அது. பேசிக்கொண்டிருந்தபோது, “அது ரேப்தான். எந்தச் சந்தேகமுமில்லை” என்றார்.

தமிழிலக்கியப் பரப்பு, அதன் முக்கியமானதொரு கதாபாத்திரத்துக்கான நீதியை, விமர்சகரான என்னிடம் கோரி நின்றதைப் போலக் கற்பனைவசப்பட்டேன்.

“கதைத் தரவுகளிலிருந்து அதைத்தான் நான் எழுதினேன்” என்று முணுமுணுத்தேன் நான்.

என்ன நடந்தது?

“அது கொட்டும் மழையில் நடந்தது. சாதாரண நிறுவனத்தில் பணி செய்த ஏழைப் பெண். பதினேழு பதினெட்டு வயதுதான் இருக்கும். அடுத்த சில நாட்களில் அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறினார். காவல் துறையில் புகாரளிக்க அவர் தயாராக இல்லை. மேலும் அந்த ஆண் ஒரு முக்கியப் புள்ளி. அவர் காரை வைத்து அவரைத் தேட முடிந்தது. அவரும் அந்தப் பெண்ணோடு கடைசிவரை இருந்தார், காப்பாற்றினார்” என்று கூறினார்.

“நாவலில் வருவது போல அந்தப் பெண் குடிகாரராக மாறினாரா?” என்று கேட்டேன்.

“அது எனக்குத் தெரியாது. ஆனால், அந்தக் கனவானின் குடும்பத்தில் குழப்பத்துக்குக் காரணமான குற்ற உணர்ச்சியில் அது நடந்திருக்கலாம்” என்றார்.

இலக்கியத்துக்கும் சமூகத்துக்குமான தொடர்பு

ஓர் உண்மை நிகழ்வை அதன் இலக்கியப் பதிவு அச்சுப் பிசகாமல் அடியொற்றியிருக்கலாம், அப்படி இல்லாமலும் இருக்கலாம். அது அல்ல விஷயம். எழுத்து என்பதும் இலக்கிய நிறுவனம் என்பதும் தனியானதொரு சாம்ராஜ்ஜியத்தை நடத்துபவை அல்ல, அவற்றுக்கேயான தன்னிச்சையான அளவுகோல்களின் அடிப்படையில் இயங்குபவை அல்ல, சமூக நிகழ்வுகளில் அழுத்தமாகக் கால் பதித்திருப்பவை. குடும்பம், பணியிடம் போன்ற மற்ற சமூக நிறுவனங்களோடு, அவற்றின் அரசியல்களோடு இலக்கியத்தின் தொடர்பு பொருண்மையானது, அறுக்க முடியாதது என்பதை அந்தப் பெண்மணியோடான உரையாடல் மீண்டுமொரு முறை நிறுவியது. தமிழ் நவீன இலக்கியத்துக்கு ஜெயகாந்தனின் பங்களிப்பு செறிவு வாய்ந்தது என்றால், அந்தச் செறிவு இந்தத் தொடர்பிலிருந்து வருவது. இந்தத் தொடர்புக்கு அவர் எழுத்து கடன்பட்டது.

நான் முன்னர் விவாதித்த, கங்காவின் மாமாவைப் போல, மரபின் பிரதிநிதிகள் என்று முதல் பார்வையில் படுகிற கதாபாத்திரங்கள், நவீன நீதிமன்றத்தின், மருத்துவ க்ளினிக்கின், குடும்பத்தின் ஆதிக்கச் சொல்லாடல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை இந்தத் தொடர்பில் வைத்து வாசிப்பது நமக்கு உதவும்.

கங்காவின் குடிப் பழக்கம்

என் கட்டுரைக்காக நாவலின் கடைசியில், கங்கா குடிப் பழக்கத்துக்குள் நுழைந்தது எதனால் என்று நான் யோசித்தபடி இருந்த நாட்களில்தான் அந்தப் பெண்மணியுடனான சந்திப்பு நிகழ்ந்தது. கங்காவின் குடிப் பழக்கத்தை அவள் வீழ்ச்சியாக, பிரபுவின் விலகலால் ஏற்படத் தொடங்கிய அவளது சிதைவாக வாசிக்கிறார் ஜெயமோகன். பிரபுவின் விலகலால் கங்காவின் “சுயகௌரவம்”, “தனித்தன்மை”, “பாலியல் வேட்கை” போன்ற ஏதோ ஒன்று அவமரியாதைக்கு உள்ளானதால் விளைந்ததென இதை ஜெயமோகன் வாசிக்கிறார். பிரபுவுக்கான தேடலில் கங்காவின் தனித்தன்மை, பாலியல் வேட்கை ஆகியவற்றுக்கு இடமில்லை என என் முந்தைய கட்டுரைகளில் மறுத்து எழுதியிருக்கிறேன்.

கங்காவின் தன்னிலை நொய்மையான தன்னிலையாகவே நாவலில் பெரும்பாலும் காட்டப்படுகிறது. வல்லுறவை முன்னிலைப்படுத்தி, அது தொடர்பான வேதனைமிகு (traumatic) உணர்வோடு கூடிய, அந்த உணர்வின் பரப்பில் கட்டப்பட்ட தன்னிலையாகவே அது உள்ளது. ஆனால், நொய்மை, வல்லுறவுக்கு ஆளானதால் உருவாகிய ஒன்றாக இல்லாமல், வல்லுறவைக் கோரும் சுபாவமாகக் காட்டப்படுகிறது. அதாவது விளைவாக இல்லாமல், காரணமாக.

மேலும், இந்தச் சுபாவம் அவளுடைய உள்ளுறை குணமாகக் காட்டப்படுகிறது. “நீ இயற்கையிலேயே எவ்வளவு கீழ்த்தரமான குணம் உடையவள்னு தெரியறதா? ஏன்னா, யாருன்னே தெரியாத ஒருத்தனுக்கு அவ்வளவு சுலபமா எப்படி உன்னாலே இணங்க முடிஞ்சது?” என்று ஓரிடத்தில் அவள் மாமா கேட்கிறார் (64).

இன்னொரு இடத்தில் “…அவன் உன்னை பலாத்காரமா செஞ்சான்? உன்னை மாதிரிப் பெண்களை எவனும் பலாத்காரம் செய்ய வேண்டாம்” என்கிறார் (66).

இத்தகைய பேச்சுகள், வல்லுறவின் வேதனையைத் தாண்ட முடியாதபடி கங்கா எனும் தன்னிலையைக் கட்டுப்படுத்துகின்றன.

இன்னொரு கரப்பான் பூச்சி

தன்னிடம் “சீப்னஸ்” இருக்கிறதா, தான் கீழ்த்தரமான குணமுடையவள்தானா என கங்காவே எண்ணுகிறாள் (85, 88). அத்தோடு, தான் பிறருக்கு எவ்வாறு தோன்றுகிறோம் என்று அவள் யோசிக்கிறாள். மாமாவைப் போலவே எல்லாரும் தன்னிடம் “மிஸ்பிஹேவ்” செய்யத் தயாராக இருப்பதாக அவளுக்குப்படுகிறது. இதில் பஸ் கண்டக்டரும் உண்டு. மீதிப் பேரிடம் சில்லறை வாங்கும்போதும் கொடுக்கும்போதும் விரல்களைத் தொட்டுத் தராத கண்டக்டர் அவளிடம் மட்டும் விரல்களைத் தொட்டுக் கொடுக்கிறான் (86). ஆண்களை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று அவள் நினைப்பதும், கரப்பான் பூச்சிகளாக அவர்களை உருவகிப்பதும் அந்த இடத்தில்தான் (86). நாவலின் அந்தக் கட்டத்தில், பிரபு இன்னொரு கரப்பான் பூச்சிதான் அவளுக்கு.

ஏற்கெனவே முன்பு ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டது போல, வல்லுறவை மையப்படுத்தி நாவலின் கதையாடல் பின்னப்பட்டிருந்தாலும், வல்லுறவு என்பது தனித்த, தனிப்பட்ட ஒரு நிகழ்வு என இல்லாமல் பிறச் சமூகச் செயற்பாடுகளோடு (உதாரணமாக, மேலே பத்தியில் குறிப்பிட்ட பஸ் பயணம், குடும்ப உறவு போல) அதை இணைத்துக் காட்டுகிறது. இது நாவலின் வலுவான, பெண் சார்பான அம்சம். வல்லுறவு என்பதை மாற்ற முடியாத விதி (fatalistic) போல அமைத்து அதைச் சுற்றியே கங்காவின் வாழ்க்கையை நாவலின் கதையாடல் தீர்மானித்தாலும், ‘கீழ்நிலையில்’ பெண் தன்னிலையைக் கட்டியமைக்கிற சமூகச் செயற்பாடுகளை, நிறுவனங்களைக் குறித்த கலை விசாரணையையும் கூடவே அது வைக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் இடம் இது.

தனக்குப் “புருஷன்” வேண்டும் என்றுதான் கங்கா ‘கரப்பான் பூச்சி’யைத் தேடிப் போகிறாள் (88). பிறகு, ஏதோ ஒரு கட்டத்தில் அவளுக்கு அவன்மேல் காதல் வருகிறது. நம் சமூக மதிப்பீடுகளின்படி கனவானாக அவன் இருப்பதால் அவள் ஈர்க்கப்படுகிறாள்போல. அவனோடு பேசப் பேச அவனைப் பற்றி அவ்வாறுதான் தோன்றுகிறது அவளுக்கு. அவள் மேல் அவன் காட்டும் அக்கறையை எண்ணிப் பார்க்கிறபோது, எழுத்தாளர் ஆர்.கே.வி அவனைக் கனவான் என்று சொன்னதை நினைத்துக்கொள்கிறாள் (143). அவனுடைய பிம்பம் அவளிடம் இப்போது வேறொன்றாக மாறுகிறது. ஆண்பிள்ளையோடு பேசுவது போலவே தோன்றவில்லை. அவளைவிட பலம் குறைந்தவனாக சின்னப் பையனைப் போல அவளுக்கு அவன் தோன்ற ஆரம்பிக்கிறான் (151-152).

காதல் என்னும் அம்சம்

பிரபு என்ற கதாபாத்திரத்தின் படிப்படியான இந்த மாறுதல்களைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாமல், நாவலின் கடைசியில் கங்கா அவனோடு உறவு கொள்ள விழைவதை, அதை அவள் வெளிப்படுத்துவதை அணுகுவது பொருந்தாது. அவள் காதலை அடியொற்றித்தான் அவளது பாலியல் விழைவு இருப்பதாகவே பிரதி முன்னிறுத்துகிறது.

சொல்லப்போனால், அவன்பால் அவள் கொள்ளும் காதல் / ஈர்ப்பு முன்பைவிட வலுமிக்கவளாக அவளை மாற்றுகிறது. எந்த ஆணும் தன்னிடம் “மிஸ்பிஹேவ்” செய்யக்கூடும் என்ற எண்ணம் கடந்த கால எண்ணமாகப் பின்தங்குகிறது (159). அவனுடனிருப்பது பலவந்தத்துக்கு இணங்கும் தன் “பலவீனத்திலிருந்தும்” தன்னை மீட்டுவிடும் என்று நம்புகிறாள் (217). அவனோடு தொடர்பு வலுப்படும்போது தன் மாமாவை அவள் எதிர்கொள்கிற விதமும் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது. தன்னை அடிக்க வரும் மாமாவை அவளால் தடுத்து நிறுத்த முடிகிறது.

இயற்கையிலேயே வலுவானதாகவும் நொய்மையானதாகவும் அமைந்ததாகக் கட்டியமைக்கப்படுகிற ஆண்பால், பெண்பால் தன்மைகள், காதலால்தான் கதையில் சற்றேனும் கலைக்கப்படுகின்றன. இக்காதல் பரஸ்பரமான ஈர்ப்பாக உள்ளது. பிரபுவுக்கும் கங்காமேல் ஈர்ப்பு இருக்கிறது. கங்காவின் எண்ணவோட்டமாக அது சுட்டப்படுகிறது (192). ஆனால், நாவலின் கடைசிக் கட்டத்தில் பிரபு அவள் விழைவை மறுப்பதாகவும் விலகுவதாகவும் வருகிறது. விளைவாக அவள் குடிப் பழக்கம் அல்லது சிதைவின் தொடக்கம்.

வல்லுறவு என்ற கடந்த காலத் தீய நிகழ்வின் நினைவுப் பிடியிலிருந்து அவர்கள் காதல் தப்பிக்க முடியாததால் நேர்ந்த விளைவு இது என்றுதான் இதை நான் பார்க்கிறேன். வல்லுறவின் காரணமாகத்தான் கங்கா பிரபுவைத் தேடி வருகிறாள்; தனக்கு ஏற்கெனவே அவனோடு கல்யாணம் ஆகிவிட்டதாகத் தான் கருதுவதை அவனிடம் கூறுகிறாள். என் பெயரோடு உன்னைச் சேர்த்து அசிங்கப்படுத்திக்கொள்ளாதே என்கிறான் பிரபு (144-146).

காரில் நடந்த அந்தச் சம்பவத்தால்தான் அவனைத் தேடி வந்தாள், அவனோடு இருக்க நினைக்கிறாள் என்பதே அவனைப் பொறுத்தவரை உறவுக்கு ஒரு முட்டுக்கட்டை. ஏனெனில், இந்த நிலையில் இருவருக்கும் இடையிலான விழைவை, கூட இருத்தலை அவன் அங்கீகரித்தால், அந்தச் சம்பவத்தில் ரேபிஸ்ட் அடையாளத்தை அவன் ஏற்பதாகத்தானே அது இருக்கும்? அந்த அடையாளத்தை அவன் சுவீகரிக்க மறுக்கிறான். அசந்தர்ப்பமாகிவிட்ட அவர்களுக்கிடையிலான முதல் சந்திப்பை மனதில் கொண்டே அவன் விலகுகிறான் என்ற சமிக்ஞையைத்தான் பிரதி தருகிறது.

சுருதி பேதமும் அர்த்த பேதமும்

பிரபு விலகிய பின் தொலைபேசியில் அவர்கள் பேசும்போது இப்படியோர் உரையாடல் வருகிறது

“ஐ ஹேவ் லாஸ்ட் மைசெல்ஃப் — நான் என்னை இழந்துட்டேனே இது உங்களுக்குத் தெரியலியா?”

“நோ நீ உன்னை இழக்கல்லே. ஒரு தடவை நான் அப்படி நினைச்சது எவ்வளவு பெரிய தப்புனு நான் புரிஞ்சிக்கிட்டவன். மறுபடியும் அப்படி நினைச்சு இன்னொரு பெரிய தப்பைச் செய்ய நான் தயாரா இல்லை…” (398-399)

அவர்களின் முதல் சந்திப்பின் நிகழ்ந்த சுருதி பேதம், அர்த்த பேதமாக இந்த உரையாடலில் ஒலிக்கிறது. அவள் வார்த்தைகளில் இழப்பு என்பது தன்னை அவனிடம் ஒப்புக்கொடுத்திருப்பது. அதனால்தான் அவள் மருகுகிறாள். ஆனால், அவன் இழப்பு என்பதை நிலை தடுமாறுதலாக அர்த்தப்படுத்திக்கொள்கிறான். அப்படி அர்த்தப்படுத்தலின் பின்னணியில் கார் சம்பவத்தின் நினைவு இயங்குகிறது. கூர்ந்து வாசித்தால், அந்தத் தீய நிகழ்வின் நினைவிலிருந்து இத்தருணத்தில் அவள் விடுபட்டவளாக, வெளிவந்தவளாகத்தான் அவள் இருக்கிறாள். ஆனால் அவனோ அதில் சிக்குண்டவனாக இருக்கிறான். அதனாலேயே அவன் அகத்தின் காதல் மடை அவளை நோக்கித் திறக்கப்படுவதில்லை.

காலம்காலமாக நிறைவேறாத தீராத காதலால் குடியில் புதைந்தபோன காவிய நாயகர்களின் வரிசையில்தான் கங்காவை என்னால் இணைத்துவைத்துப் பார்க்க முடிகிறது. கடைசியில் அவள் வந்து சேர்ந்த இடத்தை அவளது சிதைவின் தொடக்கமாக நாம் கருதினோமானால், அவள் பாலியல் தேடல், சுய கௌரவம், சுய அடையாளம் போன்றவை மறுக்கப்பட்டதால் அது நேர்வதில்லை. காதலின் கைகூடாமையினால்தான் அது நடக்கிறது. இதுவரையிலான புனைகதை மரபில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட சுயசிதைவின் வழி அது. ‘சில நேரங்களில் சில மனிதர்களில்’, முதன்முதலாகப் பெண் கதாபாத்திரத்துக்கு அந்த வழி திறக்கப்பட்டிருக்கிறது.

குடிவெளியைப் பெண்ணுக்குக் காட்டித்தந்ததல்ல இங்கே முக்கியம். இந்தச் சுயசிதைவின் பாதை, ஒரு நாயகனை இட்டுச்செல்வது போலவே கங்காவையும் சோக காவிய சிம்மாசனத்துக்கு இட்டுச்செல்கிறது என்பதே சிறப்பு. செவ்வியல் ஆக்கமாக ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவல் திகழுவதற்கு இப்புதுமையும் ஒரு காரணம்.

நூல் / கட்டுரைத் தரவுகள்:

ஜெயகாந்தன். சில நேரங்களில் சில மனிதர்கள். மதுரை: மீனாட்சி புத்தக நிலையம், 1970

ஜெயமோகன். [சில நேரங்களில் சில மனிதர்கள்: ஒரு கழுவாய்]https://www.jeyamohan.in/98338#.XE3PalxKjIX) மே 12, 2017

#MeToo இயக்கத்தை முன்வைத்து பெருந்தேவி எழுதியுள்ள இதர கட்டுரைகள்:

ஆண்மையச் சமூகக் கொள்ளை நோய்!

காமத்தின் பேரம்!

#MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

பாலியல் வன்முறையை எப்படி வரையறுப்பது?

பாலியல் துன்புறுத்தல் இயல்பாக்கப்படும் விதம்!

பாலியல் வன்முறைகளின் அடிப்படை எது?

சமூக உதாசீனம் என்னும் பனிக்கட்டி

வல்லுறவும் இடி என்னும் உருவகமும்!

பாலுறவில் சம்மதம் என்னும் சிக்கல்

வல்லுறவிலிருந்து பாலியலை விலக்குதல்!

வல்லுறவை சமூகச் செயல்பாடாக அணுகுதல்

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019