மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

அழகிரி செல்போன் சொன்ன பிறந்தநாள் செய்தி!

அழகிரி செல்போன் சொன்ன  பிறந்தநாள்  செய்தி!

திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு இன்று 69 ஆவது பிறந்தநாள். 2014 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி திமுகவில் இருந்து நீக்கப்பட்டு ஐந்து வருடங்கள் முடியப் போகின்றன. நீக்கப்பட்ட சில வருடங்கள் அதிரடியாக தனது பிறந்தநாளைக் கொண்டாடிய அழகிரி, சமீப வருடங்களாக பெரிய அளவில் கொண்டாட்டங்களை விரும்பவில்லை.

இந்த வருடம் தனது தந்தையான கலைஞர் இறந்து ஒருவருடம் முடியாத நிலையில் தனது பிறந்தநாளையும் கொண்டாட வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களுக்கு சொல்லிவிட்டார் அழகிரி. தனக்கு நெருக்கமான எசக்கிமுத்து உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகளாவது வழங்கலாமா என்று கேட்டபோது, ‘தலைவர் கலைஞர் இறந்த நிலையில எந்த வித கொண்டாட்டமும் வேணாம். நானே மதுரையில இருக்கமாட்டேன். என்னைத் தேடி யாரும் வர வேணாம்’ என்று சொல்லிவிட்டாராம்.

ஜனவரி 28 ஆம் தேதியே மதுரை வீட்டில் இருந்து புறப்பட்ட அழகிரி சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் இருக்கும் தனது பண்ணை வீட்டுக்குச் சென்றுவிட்டார். இன்று அவரது பிறந்தநாளுக்காக வாழ்த்து சொல்வதற்கு அழகிரிக்கு நெருக்கமான சிலர் முயன்றபோதும் அவர் சோழவந்தானில் இருக்கிறாரா, கொடைக்கானலில் இருக்கிறாரா, அல்லது கலைஞர் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த சென்னை சென்றுகொண்டிருக்கிறாரா என்பதே யாருக்கும் தெரியவில்லை.

அதனால் அழகிரியின் செல்போனில் தொடர்புகொண்டுள்ளனர். அதிலும் சிலரது அழைப்பை மட்டுமே அட்டெண்ட் செய்து வாழ்த்துகளுக்கு நன்றி சொன்னார் அழகிரி. பலரும் அவரது செல்போனில் புதிதாக வைக்கப்பட்ட காலர் டியூன் பாடலை மட்டுமே கேட்டுள்ளனர்.

அழகிரியின் செல்போனுக்கு கால் செய்தால், ‘சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்- ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்... ... இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற நான் ஆணையிட்டால் பாடலின் வரிகளே ஒலித்தன.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon