மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல்?

பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல்?

பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் காலமாக இருப்பதால் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்யாமல் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. நவம்பர் 28ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையிலும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டானது வழக்கமான பட்ஜெட்டாகவே இருக்குமென்று பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். எந்த பட்ஜெட்டாக இருந்தாலும் முழுமையான பட்ஜெட்டாக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இடைக்கால நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் பிப்ரவரி 1ஆம் தேதி முழு பட்ஜெட்டையே தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து சில ஆதாரங்களை மேற்கோள்காட்டி டைம்ஸ் நவ் ஊடகமும் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதமாக விவசாயிகள், கிராமப்புற மக்கள் மற்றும் நடுத்தர மக்களைக் கவரும் விதமாக இந்த பட்ஜெட் இருக்குமென்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தற்போது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ள ஏழைகளுக்கு பொதுவான அடிப்படை ஊதியத் திட்டத்தை அறிவிப்பது குறித்த திட்டம் பாஜகவுக்கும் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட்டில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon