மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

'ஜேபிசிக்கோ வணக்கம்': மோடியை கிண்டலடிக்கும் காங்கிரஸ் கார்ட்டூன்!

'ஜேபிசிக்கோ வணக்கம்': மோடியை கிண்டலடிக்கும் காங்கிரஸ் கார்ட்டூன்!

ரஃபேல் விவகாரம் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கேள்விகளுக்கு பயந்துகொண்டு, பிரதமர் மோடி சுவர் ஏறி குதித்து வெளியே வருவது போல காங்கிரஸ் கேலிச் சித்திரம் வெளியிட்டுள்ளது.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றன. இதற்கு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கூட்டுக் குழுவின் விசாரணை தேவையில்லை என பாஜக பதிலளித்துவருகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் நேற்று (ஜனவரி 30) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கேலிச் சித்திரத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோரை விமர்சித்துள்ளது.

அதில், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ரஃபேல் தேர்வுக்கு பதிலளிக்க முடியாமல் பயந்துகொண்டு, ‘ஜேபிசிக்கோ வணக்கம்’ என்று கூறி தேர்வு அறையிலிருந்து சுவர் ஏறிக் குதித்து மோடி தப்பிப்பது போலவும், அவருக்காக சுவர் அருகில் கொண்டு அமித் ஷா காத்திருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வைத்துள்ள பையில் தேர்வுக்கு பயப்படாமல் இருக்க மாணவர்களுக்காக கடந்த ஆண்டு மோடி எழுதிய, ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ புத்தகமும் இடம்பெற்றுள்ளது.

இந்த கேலிச் சித்திரம் இரண்டு செய்திகளை உணர்த்துகிறது. அதாவது, மாணவர்களை பயம் கொள்ளாமல் தேர்வு எழுதச் சொல்லும் மோடி, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை என்னும் தேர்வுக்கு பயப்படுவதாக கூறுகிறது. இரண்டாவதாக புதுச்சேரி பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் உரையாடியபோது, பாஜக உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘புதுச்சேரிக்கோ வணக்கம்’ என்று கூறி அந்தக் கேள்விக்கு விடையளிக்காமல் பிரதமர் மோடி கடக்கிறார். இதனைப்போலவே நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு பதிலளிக்காமல் ’ஜேபிசிக்கோ வணக்கம்’ என்று கூறி பிரதமர் நழுவிச் செல்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon