மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

மதுரை: கட்டுக்குள் வருகிறதா கஞ்சா புழக்கம்?

மதுரை: கட்டுக்குள் வருகிறதா கஞ்சா புழக்கம்?

மதுரையில் 2018ஆம் ஆண்டில் 1.3 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டது. இம்மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டில் மட்டும் கஞ்சா விற்பனை செய்ததாக 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்திய 15 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 2018ஆம் ஆண்டில் 1.3 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் மிக அதிகமாகும். 2017ஆம் ஆண்டில் 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 123 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 760 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டில் வெறும் 151 கிலோ கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் டி.என்.என். ஊடகத்திடம் பேசுகையில், “கஞ்சா பழக்கத்தின் காரணமாகப் பல இளைஞர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைகிறது. இப்போது இதற்காக சிறப்புப் படைகளை அமைத்துள்ளோம். மதுரை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை இப்போது வளரவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல இயலும்” என்றார். மேலும், இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon