மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

மீ டூ புகார்: பத்திரிகையாளர் பிரியா ரமணி ஆஜராக சம்மன்!

மீ டூ புகார்: பத்திரிகையாளர் பிரியா ரமணி ஆஜராக சம்மன்!

மத்திய முன்னாள் அமைச்சர் அக்பருக்கு எதிராகப் பாலியல் புகார் தெரிவித்த பிரியா ரமணி பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராக டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர மீ டூ பிரச்சாரம் இணையதளத்தில் தொடங்கப்பட்டது. இதில் பல பெண்கள் முன்னாள் மத்திய அமைச்சர் அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பத்திரிகையாளர் பிரியா ரமணி, தான் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஜே.அக்பரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் அழுத்தத்தால் அக்பர் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

தொடர்ந்து, பிரியா ரமணி மீது பட்டியாலா நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அதில், தன் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்று அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கை மாஜிஸ்திரேட் சமர் விஷால் விசாரித்து வந்தார். கடந்த நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற வழக்கில் பிரியா ரமணியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அக்பரைக் காயப்படுத்தும் உள்நோக்கத்துடனே இருப்பதாக சண்டே கார்டியன் இதழின் ஆசிரியர் ஜோயிதா பாசு தெரிவித்திருந்தார். அதுபோன்று அக்பரும், தனது வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் சமர் விஷால் முன் அளித்திருந்தார்.

இந்த, வழக்கு நேற்று (ஜனவரி 29) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அக்பர் மீது குற்றம்சாட்டிய பத்திரிகையாளர் பிரியா ரமணி பிப்ரவரி 25ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, “எங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்ல நேரம் வந்துவிட்டது” என்று பிரியா ரமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon