மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

சன் டிவியின் கார்ப்ரேட் பார்முலா: ஒரு பிளாஷ் பேக்!

சன் டிவியின் கார்ப்ரேட் பார்முலா: ஒரு பிளாஷ் பேக்!

தமிழ் சினிமா 365: பகுதி - 29

இராமானுஜம்

விட்டுக் கொடுத்து அதற்கான வட்டியும் - முதலுமாக வசூல் செய்யும் கார்ப்ரேட் கொள்கையை காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் சன் நெட்வொர்க் அரங்கேற்றியது எப்படி?

முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு வேண்டியவர்கள், இயக்கி தயாரித்த படம் காதலில் விழுந்தேன். நகுல், சுனைனா ஜோடி நடித்த படம். புதுமுகங்கள் நடித்த படம் என்பதால் விநியோகஸ்தர்கள் இப்படத்தை விலைக்கு வாங்கவில்லை.

தினகரன் பத்திரிகை மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இவர்களைப் பற்றிய கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு உயிர்சேதமும் ஏற்பட்டிருந்த காலகட்டம்.

இதனால் மாறன் சகோதரர்களுக்கும் - திமுக தலைமைக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டிருந்த சூழலில் 'காதலில் விழுந்தேன்' திரைப்படத்தை தமிழகம் முழுவதும் நேரடியாக சன் பிக்சர்ஸ் திரையிட்டது. தமிழ்நாடு முழுவதும் வெளியான இப்படத்தை மதுரை விநியோகப் பகுதியில் திரையரங்குகள் வெளியிட மறுத்து விட்டன. இப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் இருக்க மு.க.அழகிரி தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தினார்.

தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சன் தொலைக் காட்சி 'ஓடமும் ஒரு நாள் தரை தட்டும்' என்கிற பழமொழிக்கேற்ப மதுரை ஏரியாவில் படத்தை திரையிட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகியவற்றின் உதவியை சன் பிக்சர்ஸ் நாடியது. திமுக ஆளுங்கட்சியாக இருந்ததால் சங்கங்கள் வழக்கம் போல் மெளனம் சாதித்தன.

வேறு வழியின்றி மதுரை ஏரியாவை தவிர்த்து ‘காதலில் விழுந்தேன்’ படம் வெளியானது. படத்தை வெற்றியடையச் செய்ய பிரம்மாண்டமான விளம்பர யுக்தியை தொடங்கியது சன் பிக்சர்ஸ். படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

சாதாரண திரைக்கதை கொண்ட ஒரு படத்தை பெரும் வசூல் செய்யக் கூடிய படமாக தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலமாக சாதித்து காட்டியது சன் பிக்சர்ஸ்.

பிற ஏரியாக்களில் படத்திற்கான வரவேற்பு, வசூல் விபரங்களை கேட்டறிந்த மதுரை பகுதி திரையரங்க உரிமையாளர்கள் மறு நாள் படத்தை திரையிட்டனர். ஒரு படத்தின் வெற்றியை அரசியல், ஆட்சி அதிகாரங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்பதை சன் பிக்சர்ஸ் நிருபித்தது.

அந்த படத்தின் வெற்றிக்கு சன் பிக்சர்ஸ் செய்த தொலைக்காட்சி விளம்பரமே காரணம் என்கிற உளவியல் பிம்பம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் உருவானது. புதிய படங்களுக்கு குறைவான பட்ஜெட்டில் தொலைக்காட்சி விளம்பரங்களை செய்து வந்த தயாரிப்பாளர்கள் அதன் பின் ஐம்பது லட்சத்தை கடந்து இன்றைக்கு கோடிக்கணக்கில் தொலைக்காட்சி விளம்பரங்கள் செய்தால் தான் படம் ஓடும் என்கிற மனநிலைக்கு ஆட்பட்டு விட்டனர்.

தங்கள் சொந்த படமான காதலில் விழுந்தேன் படத்திற்கு விளம்பரங்களை சன் தொலைக்காட்சியில் மட்டுமே வெளியிட்டது சன் பிக்சர்ஸ். படத்திற்கு எதிராக மதுரை ஏரியாவில் மு.க அழகிரி தடையாக இருந்தது, படம் பற்றி தியேட்டர்களில் ரசிகர்கள் கூறிய விமர்சனங்கள் இவை அனைத்தும் விளம்பரமாக இல்லாமல் செய்திகளாக்கப்பட்டது. தங்கள் படத்திற்காக மெனக்கெட்ட சன் தொலைக்காட்சி அதனை வட்டியும் முதலுமாக பிற படங்களுக்கு வரும் விளம்பர வருவாய் மூலம் அறுவடை செய்வது இன்று வரை தொடர்கிறது.

அப்பாவி தயாரிப்பாளர்கள் கார்ப்பரேட் வலையில் இருந்து மீள முடியாது தடுமாறி வருகின்றனர்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019