மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

ஜார்ஜ் பெர்னாண்டஸ்: மறக்க முடியாத மகத்தான ஆளுமை. . . .

டி.எஸ்.எஸ். மணி

ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு பல அனுபவங்களை, படிப்பினைகளைக் கொடுத்துள்ளது. சரியாக இஸ்திரி போடப்படாத வெள்ளை ஜிப்பா, வெள்ளை பைஜாமா, தடித்த கண்ணாடி ஆகியவற்றுடன் எளிமையாகத் தோற்றமளித்தவர் ஜார்ஜ். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்தார். காங்கிரஸ் அரசாங்கங்களிலேயே, உச்சகட்ட யதேச்சதிகாரி என்று பெயர் பெற்றிருந்த இந்திரா காந்தியின் உச்சகட்ட அடக்குமுறையாகக் கருதப்படும் நெருக்கடி நிலையை எதிர்த்துக் களம் கண்டவர்.

சாதாரணக் களமா அது? மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை எல்லாம் வேட்டையாடிவந்த இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை ஜெயப்பிரகாஷ் நாராயணன் முதல், தமிழ்நாட்டு திமுகவினர் வரை, அனைவரையும் சிறையில் தள்ளியபோது, அரசின் கைகளுக்குச் சிக்காமல் தலைமறைவாக இருந்துகொண்டே, இயக்கம் கட்டிய வீரமிகு போராளி. நெருக்கடி நிலை வருவதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்த அகில இந்திய ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்திய மாபெரும் தொழிற்சங்கவாதி தோழர் ஜார்ஜ் பெர்னான்டஸ். அவரது தாத்தா நானூறு ஆண்டுகளுக்கு முன்னால், தூத்துக்குடியை விட்டு மங்களூருக்குச் சென்று வாழ்ந்தவர். மீனவர் பின்னணியைக் கொண்ட தமிழர் என்பதே இவரது வரலாற்றுப் பின்னணி.

சமய போதனையில் விருப்பமின்மை

1930ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று, மங்களூரில் ஜோசப் பெர்னாண்டோ, அலைஸ் மார்த்தா பெர்னாண்டோ தம்பதியர்களின் மூத்த மகனாகப் பிறந்தார். ஆறு குழந்தைகளில் இவர் முதலாமவர். இதே நாளில் பிறந்த இங்கிலாந்து அரசர் ஜார்ஜ் மேலுள்ள ஈர்ப்பின் காரணமாக இவருக்கு ஜார்ஜ் என்று இவரது தாயார் பெயர் சூட்டினார்.

மங்களூரியன் கத்தோலிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த ஜார்ஜ், சிறு வயதிலேயே, குடும்பத்தவர்களால் ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் பணி செய்ய, குருமார் ஆவதற்கான படிப்பில், 1946இல் பெங்களூரில் புனித பீட்டர்ஸ் செமினரியில் 16 வயதில் சேர்க்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் சித்தாந்தம் படித்தார். அங்கே ரெக்டர்களுக்குத் தனி மேசை, தனி உணவு என்று இருந்த ஏற்பாட்டில் இவருக்கு உடன்பாடில்லை.

இதுபோன்ற முரண்களைப் பற்றிய தனது சிந்தனைகளுக்கு முழுமையான விடை கிடைக்காத நிலையில், ஜார்ஜ் செமினரியை விட்டு 1949இல் வெளியேறினார். மத நம்பிக்கையையும் இழந்தார். அப்போதே மங்களூரில் போக்குவரத்துத் தொழிலாளர்கள், உணவு விடுதித் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். 1949இல் பம்பாய் சென்றார். தங்க இடம் இன்றித் தெருக்களிலும் சௌபாதி கடற்கரை மணலிலும் படுத்து உறங்குவார். நள்ளிரவில் காவலர்கள் வந்து எழுப்பி விரட்டிவிடுவார்கள்.

பம்பாயில், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த தோழர் பிளாசிட் டிமாலோ தலைமையிலான, போர்ட் & டாக் தொழிலாளர் சங்கம் துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் இயங்கிவந்தது. டிமாலோவின் தொழிற்சங்கப் பணிகளில் ஈர்க்கப்பட்டு, ஜார்ஜ் அவருடன் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். நாளிதழ் ஒன்றில் பிழை திருத்தும் பணியில் ஈடுபட்டார். அங்கே பாம்பே டாக்சி சங்கம், நகராட்சி ஊழியர் சங்கம் போன்ற அடிமட்ட தொழிலாளர் சங்கங்களைக் கட்டி எழுப்பினார். ரயில்வே தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினர்.

ராம் மனோகர் லோஹியாவின் சோஷலிஸக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்தார். சோஷலிச தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டார். பம்பாய் நகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, 1961 முதல் 1968 வரை பம்பாய் நகராட்சி உறுப்பினராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் பம்பாயில் நடந்த பல வேலைநிறுத்தங்களிலும் போராட்டங்களிலும் இணைந்து பயணம் செய்ததால், பொது வெளியில் முக்கியமான செயற்பாட்டாளராக உருவெடுத்தார்.

1967 பொதுத்தேர்தலில், தெற்கு பம்பாய் தொகுதியில் 20 ஆண்டுகளாக அரசியலில் இருந்த பிரபல காங்கிரஸ் தலைவர் எஸ்.கே. பாட்டீல் என்ற சதாசிவ கனோஜி பட்டீலைத் தோற்கடிக்க இந்தப் பணிகள் மூலம் கிடைத்த ஆதரவும் புகழும் உதவின. ஜார்ஜ் 48.50% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1969இல் சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் (எஸ்.எஸ்.பி.) பொதுச் செயலாளராக இருந்தார். 1973இல் அதன் தலைவரானார்.

சக்கரங்கள் ஓடாது!

1970இல் தொடங்கி, தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சங்க வேலைகளில் ஈடுபட்டார். ரயில்வே தொழிலாளர்களுக்கு, 1947 முதல் 1974 வரையிலான, மூன்று சம்பள ஆணையங்களிலும் சம்பள உயர்வு இல்லை. கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு என்ற அமைப்பைக் கட்டி எழுப்பினார் ஜார்ஜ். 1974 மே 8 அன்று, தேசிய ரயில்வே ஒருங்கிணைப்புக் குழு (என்.சி.சி.ஆர்.எஸ்.) உருவானது.

ரயில்வே தொழிலாளர் போராட்டம் என்ற இந்திய அளவிலான மாபெரும் போராட்டத்தை அறிவித்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சக்கரங்கள் ஓடாது என்ற அந்தப் போராட்ட முழக்கம் பிரபலமானது. பம்பாயில் இருந்த மின்வாரியத் தொழிலாளர்களும் போக்குவரத்துத் தொழிலாளர்களும் ரயில்வே போராட்டத்தை ஆதரித்தனர். பிகாரில் ரயில்வே தொழிலாளர்கள் கயாவில் தண்டவாளத்தில் அமர்ந்து மறித்தனர். சென்னை ஐ.சி.எஃப்.இல் இருந்த 10000 தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஜார்ஜ் உட்பட முப்பதாயிரம் தொழிலாளர்கள் கைதானார்கள். தொழிற்சங்கத்திற்கு உள்ளேயே வேறுபட்ட பேச்சுக்கள் இருந்தது என்று ஜார்ஜ் கூறினார். அதனால், மே 27இல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தொழிலாளர்கள் விடுதலை ஆனார்கள். ஜார்ஜ் விடுதலை செய்யப்படவில்லை. ரயில்வே தொழிலாளர் போராட்டம் ஜார்ஜை இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற நிலைக்கு உயர்த்தியது.

1975இல் இந்திரா காந்தி பல்வேறு நெருக்கடிகளால் கோபக்கனலாக மாறி, 1975 ஜூன் 25இல் நெருக்கடி நிலையை அறிவித்தார். ஜார்ஜ் முன்னின்று நடத்திய ரயில்வே வேலைநிறுத்தமும் அந்த நெருக்கடிகளில் ஒன்று என்பதால் ஜார்ஜ் மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். ஜார்ஜ் எங்கே எனக் கேட்டுக் காவல் துறை, அவரது தம்பி லாரன்ஸ் பெர்னாண்டஸைச் சித்திரவதை செய்தது. ஜார்ஜின் நண்பர் ஸ்னேஹலதா ரெட்டி கைது செய்யப்பட்டார். விடுதலையாகி அந்தத் தாக்கத்தில் இறந்து போனார்.

புகலிடம் தந்த தமிழகம்

நெருக்கடி நிலையின்போது தலைமறைவான ஜார்ஜ் தமிழ்நாட்டில் தங்கியிருந்தார். அவருக்கு அப்போது தமிழக முதல்வர் கலைஞரின் ஆதரவு கிடைத்தது. விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளர் சங்கம் வலுவாக இருந்தது. திமுகவைச் சேர்ந்த வண்டிப்பாளையம் சுப்பிரமணியம் ஜார்ஜுக்கு அடைக்கலம் கொடுத்ததாகச் செய்தி பரவியதுண்டு. 1975 ஜூலையில் பரோடா டைனமைட் வழக்கு ஜார்ஜ் மீது போடப்பட்டது. பரோடா ஊடகவியலாளர் சங்கத் தலைவர் மீதும், அன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் மீதும் இணைத்து அந்த வழக்கு போடப்பட்டது. பின்னாளில் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த பட்வாரி மீதும் ஜார்ஜ் உடன் சேர்ந்து சதி செய்ததாக அந்த டைமனமைட் வழக்கு போடப்பட்டது.

டைனமைட் வெடிபொருளைத் தயார் செய்து, இந்தியா முழுதும், அரசு கழிப்பிடங்களில் வெடிக்கச் செய்வதும், இந்திரா காந்தி பேசிவரும் கூட்டங்களில் சிறிது தள்ளி, யாரையும் கொல்லாமல், பீதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் வெடிக்கச் செய்யவும் திட்டமிட்டார்கள் என்பதே அந்த வழக்கு. வாரணாசியில் இந்திரா காந்தி பேச வருவதற்கு நாலு மணிநேரம் முன்பு வெடிக்கச் செய்ய திட்டமிட்டதாக அந்த வழக்கு கூறியது. அதனாலேயே பரோடா டைனமைட் வழக்கு என்று அது பிரபலமானது. புனே அருகே பிம்ப்ரி யிலிருந்து பாம்பே செல்லும் ரயில் வண்டியில் வருகின்ற ஆயுதங்களைக் கொள்ளை அடித்து, அதை வைத்து நாடு முழுவதும் வெடி வெடிக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஜார்ஜ் மீது வழக்கு. அந்நிய நாட்டு உதவியுடன் ஹாம் வானொலி தயார் செய்யத் திட்டமிட்டதாகவும் வழக்கு.

தலைமறைவாக இருக்கும்போதே ஜார்ஜ் பெர்னாண்டஸைக் கொன்றுவிட அரசு துடிப்பதாகச் செய்தி வந்தது. அதனால் ஜார்ஜ் கொல்கத்தாவில் கைதானார். பரோடா சிறையில் அடைக்கப்பட்டார். ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் ஜார்ஜ் சிறையில் சித்திரவதைக்கு உள்ளாவதைக் கண்டித்தன. அவர் டில்லி திஹார் சிறைக்கு மாற்றப்பட்டார்.

நெருக்கடி நிலையை எதிர்த்து நாடே கொந்தளித்ததால் 1977 பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் வந்தது. பல்வேறு கட்சிகள் சேர்ந்து ஜனதா கட்சியை உருவாக்கி அக்கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட்டன. ஜனதா கட்சி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். பிகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர் தொகுதியில் வென்ற ஜார்ஜ் ரயில்வே அமைச்சரானார். அந்த அமைச்சரவையில் பாரதிய ஜனசங்கமும் ஒரு அங்கம். ஜனதா என்னும் பெயரில் ஜனசங்கம் உள்ளிட்ட பல கட்சிகள் ஒன்றாக இணைந்திருந்தன. ஜனதாவில் உறுப்பினராக இருந்துகொண்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற பிரச்சினை கிளம்பியது. ஜனதாவில் இருந்த வாஜ்பாய், அத்வானி முதலான முன்னாள் ஜனசங்கத்தினர் இந்த ஆட்சேபணையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆட்சியில் பங்கு வகித்திருந்த சரண்சிங் பிரதமர் மொரார்ஜிக்கு எதிராகக் கலகக் கொடி எழுப்பினார். இதுபோன்ற பல முரண்களால் 1979இல் ஜனதா கட்சி உடைந்தது. ஆட்சி கவிழ்ந்தது. சரண்சிங் பிரதமரானார்.

1980இல் நடைபெற்ற ஏழாவது பொதுத் தேர்தலில் ஜனதா தோற்றது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஜார்ஜ் பெங்களூர் வடக்கு தொகுதியில் நின்றார். அவரை எதிர்த்த ஜாபர் சேட் வெற்றி பெற்றார். 1989இல் பிகாருக்கு ஜார்ஜ் மாறினார். 1989, 1991 தேர்தல்களில், பிகார் மாநிலத்தில், முஸாபர்பூர் தொகுதியில் நின்று வென்றார்.

1988இல் பெங்களூரில் ஜனதா தளம் உருவானது. அதில் ஜார்ஜ் முக்கியப் பங்காற்றினார். அடுத்து வந்த வி.பி. சிங் தலைமையிலான ஆட்சியில் அமைச்சரானார். கொங்கண் ரயில்வே திட்டத்தைக் கொண்டுவந்தார். பிகாரில் லாலு பிரசாத் யாதவுக்கும் நிதிஷ் குமாருக்கும் சண்டை பெரிதானது. ஜனதா தளம் உடைந்தது. 1994இல், லாலுவிற்கு எதிராக நிதிஷுடன் சேர்ந்து சமதா கட்சியை ஜார்ஜ் உருவாக்கினார்.

தமிழகப் போராட்டக் களத்தில் ஜார்ஜ்

இடையில் ஜார்ஜ் தமிழ்நாட்டு இயக்கங்களில் முக்கியப் பங்காற்றினார். 1989இல் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களுக்கு வழி காட்டினார். தூத்துக்குடியில் பெரிய பேரணியை எங்களுடன் நடத்தினார். எங்களுக்கு அன்று அணு உலை எதிர்ப்பைக் கற்றுக் கொடுத்த, ஜீ. ராமேஷ் என்ற ஊடகவியலாளரும், அறிவியலாளருமான தோழர் நாகார்ஜுனன், ஜார்ஜுக்கு நெருக்கடி நிலை காலத்திலேயே நெருக்கமானவர். ஜார்ஜை ஆண்டன் கோமஸுக்கும் எனக்கும் அவர் அறிமுகம் செய்துவைத்தார்.

‘அதர் சைடு’ என்ற ஆங்கில ஏட்டில் எழுதிய அணு உலை எதிர்ப்பு பற்றிய கட்டுரையை எங்களுக்கு விளக்கி வகுப்பு எடுத்தார் ஜார்ஜ். அதேபோல, 1996இல், தனது நண்பர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து எங்களுடன், தூத்துக்குடியில் மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணிக்குத் தலைமை தாங்கினார். தனது நண்பர் கருணாநிதி ஏன் காவல் துறையை ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களான, சூழலியல்வாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார் என்று தூத்துக்குடி மேடையிலேயே கேள்வி எழுப்பினார்.

பாஜகவுடன் ஜார்ஜ்

1996, 1998 ஆகிய ஆண்டுகளில் அமைந்த இரண்டு கூட்டணி ஆட்சிகளிலும் ஜார்ஜ் அமைச்சராக இருந்தார். பிறகு, அவருடைய சமதா கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டது. இந்த நடவடிக்கைகள் எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்பு என்ற அவரது கொள்கையிலிருந்தே முடிவு செய்யப்பட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அமைப்பாளராக ஜார்ஜ் நியமிக்கப்பட்டார்.

1999 ஜூலையில் ஐக்கிய ஜனதா தளத்துடன் சமதாவை இணைத்தார். இரண்டாவது, மூன்றாவது தேஜகூ ஆட்சியில் அமைச்சராக இருந்தார். பாதுகாப்புத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டது. கார்கில் யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காகப் போற்றப்பட்டார். பொக்ரான் அணுகுண்டு சோதனையை நடத்தினார். எந்த ஜார்ஜ் அணு குண்டு மாத்திரமல்ல, அணு உலையே கூடாது என்று எங்களுடன் போராடினாரோ, அதே ஜார்ஜ் ஆட்சிக்கு வந்தவுடன், அணு குண்டு சோதனையை நடத்தினார் என்பதே நகைமுரண்!

மனித உரிமைச் செயற்பாட்டாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜெயப்பிரகாஷ் நாராயணனால் நெருக்கடி நிலை காலத்தில், சிறைக்குள் இருந்தே தோற்றுவிக்கப்பட்ட பியுசிஎல் என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியக் குழு உறுப்பினராக இருந்தார். 1980இம் ஆண்டு, சென்னையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு விடுதியில் நடந்த பியுசிஎல் தேசியக் குழுவில் பங்குகொண்டார். அப்போது நக்சல்பாரிகள் மீதான காவல் துறையின் ஜோலார்ப்பேட்டை தாக்குதல் பிரச்சினையாக்கப்பட்டுப் பேசப்பட்டது.

இரண்டும் ஒன்றல்ல

அந்நேரம் பியுசிஎல் அமைப்பின் தமிழ்நாடு தலைவராக இருந்தவர் சோ ராமசாமி. அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருந்தவர் அருண் ஷோரி. அவர்கள் இருவரும், நக்சல்பாரிகள் வன்முறையையும் காவல் துறையின் வன்முறையையும் இரண்டையும் சமமாக, ஒன்றே போலக் காண வேண்டும் என வாதாடினர். அதை எதிர்த்து, ஜார்ஜ் பெர்னாண்டஸ், காவல் துறையின் வன்முறை என்பது வினை என்றும் நக்சல்பாரிகள் செய்வது எதிர்வினை என்றும் வாதாடினார். அவர் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உறுப்பினராகவும் இருந்தார்.

ஜார்ஜ் ஊடகவியலாளராகவும் செயல்பட்டார். 1948இலேயே ‘கொங்கண் யூத்’ என்ற மாத இதழ் ஆசிரியராக இருந்தார். பைதாவணி என்ற கன்னட வார இதழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1952, 53 ஆண்டுகளில் டாக்மான் என்ற வார இதழில் பணியாற்றினார். அதர் சைடு என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

அண்டை நாடுகளில் நடந்துவரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதிலும் முதன்மையாகத் திகழ்ந்தார் ஜார்ஜ். 1997இல் டில்லியில், ஈழப் பிரச்சினை பற்றிய கருத்தரங்கை நடத்தி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பகிரங்கமாகவே செயல்பட்டவர் ஜார்ஜ். 1999இல் ராமேஸ்வரத்தில் திராவிடர் கழகம் நடத்திய புலிகள் ஆதரவு மாநாட்டிற்கு வந்து சிறப்பித்தார்.

அதேபோல, சீனா திபெத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, தலாய் லாமா குழுவைச் சேர்ந்த அகதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்கள். அவர்களின் மனித உரிமை நியாயங்களை ஜார்ஜ் தொடர்ந்து பேசிவந்தார். அவரது டில்லி இல்லத்தில், நாம் திபெத்தியர்களைக் காணலாம். மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக, ஜன நாயகத்திற்காகப் போராடிய இயக்கமான, ஆங் சாங் சு கியூவை ஆதரித்துப் பரப்புரை செய்துவந்தார்.

கார்கில் யுத்த காலத்தில், அவர் மீது சவப்பெட்டி ஊழல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. அவருக்கும் முப்படைத் தளபதிகள் சிலருக்கும் இடையில் இருந்த முரண்பாடே இந்தக் குற்றச்சாட்டுகளாக மாறியது என்று கூறப்பட்டது.

கார்கில் யுத்தத்தின்போது, சியாச்சின் என்ற உயர்ந்த மலை உச்சிக்கு 18 முறை சென்று, பாகிஸ்தானின் ஊடுருவலை எதிர்த்துப் போராடும் இந்திய வீரர்களுக்கு உத்வேகமூட்டியவர் ஜார்ஜ். சியாச்சினுக்குச் சென்ற ஒரே பாதுகாப்புத் துறை அமைச்சர் அவர். அந்த வயதிலும், உச்சி மலைக்குச் சென்றதாலோ என்னவோ, தலையில் தாக்கம் ஏற்பட்டு, 2005ஆம் ஆண்டு முதல் அல்சைமர் என்ற மறதி நோய்க்கு ஆளானார். பதிமூன்று ஆண்டுகள் மறதி நோயால் அவதிப்பட்டு அவர் மறைந்தார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019