மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

அடுத்த செமஸ்டரிலேயே அரியர் எழுதலாம்!

அடுத்த செமஸ்டரிலேயே அரியர் எழுதலாம்!

மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று அரியர் எழுத விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் தளர்த்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2017ஆம் ஆண்டில் புதிய தேர்வு விதிமுறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, முதல் செமஸ்டரில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால், அதனை மூன்றாவது செமஸ்டரில்தான் எழுத முடியும். இதனால், கல்வியாண்டிற்குள் அனைத்து பாடத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல், தங்களது தேர்ச்சி விகிதம் குறைவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதை எதிர்த்து, அனைத்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளிக்கும் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், அரியர் தேர்வுகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். “மாணவர்கள் அடுத்தடுத்த செமஸ்டர்களில் அரியர் தேர்வு எழுதலாம். அது போன்று, அரியர் எத்தனை இருந்தாலும் அதனை அடுத்த செமஸ்டரில் எழுதலாம். 2019-20ஆம் கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் இனி முதலாம் ஆண்டு முதல் செமஸ்டரில் அரியர் இல்லாமல் இருந்தால் மட்டுமே நான்காவது ஆண்டிற்கு அனுமதிக்கப்படுவார்கள்” என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

“மாணவர்கள் தங்களுடைய அரியர் தேர்வுகளை விரைவில் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, அரியர் இல்லா பொறியியல் படிப்புக்கு மாறிவிட வேண்டும்” என அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon