மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

புள்ளியியல் ஆணையம் மரணம்: ப.சிதம்பரம் தாக்கு!

புள்ளியியல் ஆணையம் மரணம்: ப.சிதம்பரம் தாக்கு!

தேசிய புள்ளியியல் ஆணையத்திலிருந்து 2 பேர் பதவி விலகியுள்ள நிலையில், புள்ளியியல் ஆணையம் மரணித்துவிட்டதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

நாட்டின் உச்சபட்ச புள்ளியியல் அமைப்பான தேசிய புள்ளியியல் ஆணையத்திலிருந்து இருவர் நேற்று (ஜனவரி 29) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்த அமைப்பின் தற்காலிக தலைமைப் பொறுப்பில் இருந்த மோகனன் மற்றும் மற்றொரு அதிகாரி ஜேவி.மீனாட்சி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். “புள்ளியியல் ஆணையம் தீவிரமாக செயல்படவில்லை என்று நாங்கள் உணர்கிறோம். எங்களுடைய சில முடிவுகள் இந்த ஆணையத்தால் ஏற்கப்படவில்லை. நாங்கள் ஓரங்கட்டப்பட்டோம் என்று எண்ணுகிறோம். எனவே எங்கள் பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்” என்று மோகனன் தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இந்த அமைப்பில் தொடர 2020 ஜூன் வரை நிர்ணயிக்கப்பட்ட காலம் இருக்கிறது. தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ராதா பினோத் பர்மன் 2018ஆம் ஆண்டு ஜூலை ஓய்வுபெற்று விட்ட நிலையில் தற்போது தலைமைப் புள்ளிவிவர அதிகாரி பிரவீன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகிய இரு உறுப்பினர்கள் தேசிய புள்ளியியல் ஆணையத்தில் உள்ளனர். தேசிய மாதிரி புள்ளியியல் வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டதால்தான் அவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜெயதி கோஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்தும் மத்திய அரசுக்கு கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

2017-18ஆம் நிதியாண்டுக்கான தேசிய புள்ளியியல் மாதிரி வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையை வெளியிட நாங்கள் ஒப்புதல் அளித்தும் வெளியிடப்படவில்லை என்று மோகனனும் இதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ”நவம்பர் மாதத்தில் இதைப் பின் தொடர்ந்து ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) தரவுகளை வெளியிடுவதில் நிதி ஆயோக் தலையிட்டது. வழக்கமான முறையை புள்ளியியல் ஆணையம் பின்பற்றவில்லை. நிதி ஆயோக் தலையீடுகளால் வழக்கத்துக்கு மாறாக சில நடந்தன” என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து தேசிய புள்ளியியல் ஆணையம் மரணித்துவிட்டதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில், “மேலும் ஒரு புகழ்பெற்ற நிறுவனம் அரசாங்கத்தின் தீங்கான அலட்சியத்தால் ஜனவரி 29 அன்று மறைந்துவிட்டது. இந்த மரணத்தை நாம் நினைவுகூருவோம் மற்றும் உண்மையான ஜிடிபி மற்றும் வேலைவாய்ப்பு தரவுகள் வெளிவர கடுமையாகப் போராடிய அவர்களை நன்றியுடன் நினைவுகூருவார்கள். மீண்டும் பிறந்துவரும் வரை தேசிய புள்ளியியல் ஆணையம் அமைதியில் ஓய்வெடுக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon