மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

வரலாறு படியுங்கள்: பாஜகவுக்கு முஸ்லிம் கட்சிகள் அட்வைஸ்!

வரலாறு படியுங்கள்: பாஜகவுக்கு முஸ்லிம் கட்சிகள் அட்வைஸ்!

பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் முதலில் உண்மையான வரலாற்றைப் படிக்க நேரம் ஒதுக்குங்கள் என்று மஜ்லீஸ் பச்சோ தெஹ்ரீக் கட்சியின் இளைஞர் தலைவர் அம்ஜெத் உல்லாஹ் கான் கண்டித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் உள்ள சர்மினார் மசூதி மிகவும் புகழ்பெற்றது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான மசூதி இது. ஆனால் இந்த மசூதியை முஸ்லிம்கள் கட்டவில்லை என்று கூறி மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் அனந்த குமார் ஹெட்ஜ் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். ஜனவரி 27ஆம் தேதி கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பு ஒருங்கிணைத்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார்.

அப்போது பேசுகையில், “சர்மினாரை முஸ்லிம்கள் கட்டவில்லை. அது ஜெயினர்களின் காலத்திலேயே கட்டப்பட்டது. அதேபோல தேஜோ மஹாலையும் ஷாஜகான் கட்டவில்லை. மன்னர் ஜெயசிம்ஹாவிடமிருந்து ஷாஜகான் அதை விலைக்கு வாங்கிக்கொண்டார். பின்னாளில் அது தாஜ்மஹால் என்றாகிவிட்டது” என்று கூறியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த முஸ்லிம் கட்சிகள் இவருடைய பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.

குறிப்பாக ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “டெக்கான் & இந்தியாவில் முஸ்லிம்களின் பங்களிப்பின் அடையாளமாக சர்மினார் உயர்ந்து நிற்கிறது. இந்த மசூதி இதுவரை ஆயிரக்கணக்கான பதர்களை (ஹெட்ஜ்) பார்த்துள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான பதர்களை பார்க்கும்” என்று அனந்த குமாரை சாடியுள்ளார்.

மஜ்லீஸ் பச்சோ தெஹ்ரீக் கட்சியின் இளைஞர் தலைவர் அம்ஜெத் உல்லாஹ் கானும் இதனைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்மினார் மசூதி 1591ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அப்போது சச்சாலம் என்ற சிறு கிராமமாக இப்பகுதி இருந்தது. முசி ஆற்றின் கரைப்பகுதியாகவும் இது இருந்தது. முகம்மது குலி குதுப் ஷா ஆட்சிக் காலத்தில்தான் இப்பகுதி புதிய நகரமாகக் கட்டமைக்கப்பட்டது. இது அனந்த குமாருக்கு தெரிந்திருக்காது என்பதை உறுதியாகச் சொல்வேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ஆதாரமற்றவற்றையும், பொருந்தாதவற்றையும், அடிப்படையற்ற வரலாற்றையும் கூறி அவர்கள் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். தேர்வில் பதில் தெரியாமல் பாடல்களை எழுதி வைத்துவிட்டு வரும் சில மாணவர்களைப் போல, அனந்த குமாருக்கும் உண்மையான பதில்கள் தெரியாது. அனந்த குமார் ஹெட்ஜ் உள்ளிட்ட அனைத்து பாஜக தலைவர்களும் முதலில் உண்மையான வரலாற்றைப் படியுங்கள். இதுபோன்று பேசித்தான் தெலங்கானாவில் எல்லா தொகுதிகளிலும் தோல்வி கண்டார்கள். இப்போது மக்களவைத் தேர்தலிலும் தோல்வி பெறப்போகிறார்கள். மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் தேவையே தவிர, இதுபோன்ற பிரச்சனைக்குரிய கருத்துகள் அல்ல” என்றும் அவர் கூறியுள்ளார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon