மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

மிரட்டி வாங்கிய வாக்குமூலம்: நிர்மலா தேவி புகார்!

மிரட்டி வாங்கிய வாக்குமூலம்: நிர்மலா தேவி புகார்!

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, இன்று முதன்முறையாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, சிபிசிஐடி போலீசார் தன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றதாகப் புகார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதியன்று, அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியையான நிர்மலா தேவி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சார்பில் உத்தரவிடப்பட்டது. இந்தக் குழு ஆளுநரிடம் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. நிர்மலா தேவி வழக்கு விசாரணை குறித்து திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் புகார் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக வெளியான ஆடியோ பதிவுகள் தடவியல் துறைக்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று நிர்மலா தேவி போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் எடுக்கப்பட்ட குரல் மாதிரிகள் ஏற்கனவே பதிவான ஆடியோவுடன் ஒத்துப்போகிறது என்று தடயவியல் துறை தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. இந்த வழக்கு விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உட்பட எந்த நீதிமன்றத்திலும் நிர்மலா தேவி உட்பட குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

சில நாட்களுக்கு முன்பாக, நிர்மலா தேவி தனது கடந்த காலச் செயல்பாடுகள் குறித்துப் பேசியதாகச் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. அவர் சிபிசிஐடி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல்கள் பொய்யானது என்றும், நிர்மலா தேவியை மிரட்டி வாக்குமூலம் வாங்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார் முருகன். ஆனால், நிர்மலா தேவி தரப்பில் இருந்து இது தொடர்பாகப் பதில் ஏதும் கூறப்படவில்லை.

இந்த நிலையில், இன்று (ஜனவரி 30) ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக, நிர்மலா தேவி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டார். போலீசாருடன் அவர் நடந்துவரும்போது, சில செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நிர்மலா தேவி, தன்னிடம் சிபிசிஐடி போலீசார் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கியதாகத் தெரிவித்தார். “என் பெயரில் வந்த வாக்குமூலம் பொய்யானது. இன்னும் நிறைய விஷயங்கள், ஆதாரங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் எனது வழக்கறிஞரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு ஜாமீன் வழங்கப்படாததன் பின்னணியில் உயர்மட்ட அதிகாரிகளின் இடையூறு உள்ளது. எனக்கு மிரட்டல்கள் வருகின்றன” என்று தெரிவித்தார். அவர் செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசுவதைத் தடுக்கும் வகையில், பெண் போலீசார் அவரை வேகமாக இழுத்துச் சென்றனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைதான நிர்மலா தேவி, தற்போதுதான் முதன்முறையாக தனது தரப்பு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019