மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

சனியன்று ஸ்டாலின் பிரதமர்: அமித் ஷா

சனியன்று ஸ்டாலின் பிரதமர்: அமித் ஷா

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி வெற்றி பெற்றால், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பிரதமர் இருப்பார்கள் என்று கூறியுள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சனிக்கிழமை அன்று ஸ்டாலின் பிரதமராக இருப்பார் என்று கிண்டல் செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் மெகா கூட்டணி என்றால் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்தார். அதுபோன்று கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இதுதவிர உபியில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ் வாதி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து விமர்சித்துள்ள அமித் ஷா, மெகா கூட்டணி வெற்றி பெற்றால் ஒரு நாளைக்கு ஒரு பிரதமர் இருப்பார்கள் என்று விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இன்று (ஜனவரி 30) பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி என்று கூறிக் கொள்பவர்கள் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தால் திங்களன்று மாயாவதியும் செவ்வாயன்று அகிலேஷும் புதனன்று மம்தா பானர்ஜியும் வியாழனன்று சரத்பவாரும் வெள்ளியன்று தேவகவுடாவும் சனியன்று ஸ்டாலினும் பிரதமராக இருப்பார்கள் என்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கே விடுமுறை என்றும் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 80 இடங்களில் 71 இடங்களில் பெற்ற உபியில், இந்த ஆண்டு 74 இடங்களில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2ஜி ஊழலைத் தொடர்ந்து மூன்றாவதாக ஒரு ஜி உருவாகியுள்ளது. அது பிரியங்கா ஜி என்று பிரியங்கா காந்தியை விமர்சித்துள்ளார்.

ராமஜென்மபூமி குறித்துப் பேசுவதற்கு காங்கிரஸுக்குத் தகுதியில்லை என்றும் ராமர் பிறந்த இடத்தில் நிச்சயம் ராமருக்குக் கோயில் கட்டப்படும். இதுதான் பாஜகவின் குறிக்கோள். இதற்காக 42 ஏக்கர் இடத்தைப் பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்றார்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon