மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

நினைவுகளைப் பறித்து சுயமரியாதையை பாதிக்கும் நோய்!

நினைவுகளைப் பறித்து சுயமரியாதையை பாதிக்கும் நோய்!

ஜார்ஜ் பெர்னாண்டஸைப் பாதித்த அல்சைமர் நோய் பற்றி மருத்துவர் இரா செந்தில் (பாமக) விளக்குகிறார்

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார். நாடு ஒரு போராளியை இழந்திருக்கிறது. ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆவேசமிக்க, வீரப் போராளி‌. 1974ஆம் ஆண்டு அகில இந்திய தொடர்வண்டித் துறை வேலை நிறுத்தத்தைச் செய்து வரலாறு படைத்தவர். அன்றைய பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

நெருக்கடி நிலை காலத்தில் அவர் மீது குண்டு வெடிப்பு குற்றம் சுமத்தப்பட்டு அவர் தலைமறைவானார். தலைமறைவாக வாழ்ந்த காலங்களில் தர்மபுரி மாவட்டத்தின் பெரியூர், பிக்கிலி பகுதிகளிலும் (வீரப்பன் கால் பட்ட இடங்கள்!), தர்மபுரி அருகே உள்ள வத்தல்மலை பகுதியிலும் பல மாதங்கள் மறைந்து வாழ்ந்தவர்.

மிகச் சிறந்த பேச்சாளர். நெருக்கடி நிலைக்குப் பிறகு அமைந்த ஜனதா அரசின் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தவர். அப்போது துணிச்சலோடு கோகோ கோலா கம்பெனியை மூடச் செய்தவர்

அல்சைமர் என்பது என்ன?

ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு 70 வயதுக்குப் பிறகு, அல்சைமர் நோய் தொடங்கியது. இந்தப் போராளி கடந்த 10 ஆண்டுகளாக அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அல்சைமர் என்பது மூளையில் ஏற்படும் பாதிப்பு. இந்த பாதிப்பால் மூளையின் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கும். சாதாரண ஞாபக மறதியில் தொடங்கி, கொஞ்சம், கொஞ்சமாகத் தங்கள் சுற்றுப்புறத்தை மறந்து, தங்களையும் மறக்கத் தொடங்கிவிடுவார்கள். ஏறக்குறைய குழந்தையாகவே இருப்பார்கள். தங்கள் குழந்தைகளையும்கூட அவர்களுக்கு அடையாளம் தெரியாது. ஆடை உடுத்துவதிலிருந்து, உணவு உண்பது, சிறுநீர், மலம் கழிப்பது அனைத்துக்கும் உதவி தேவைப்படும்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் இப்படி இருந்தபோது அவர் குடும்பத்தார் புறக்கணித்துவிட்டதாக வதந்தி பரவியது. பின்னர் அவருடைய மகள் அவரைத் தொடர்ந்து கவனித்துவருவதாக உறுதிசெய்தார். சமூக அக்கறையோடு பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்ட ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டது வேதனை.

எனக்குத் தெரிந்த, மருத்துவத் துறையில் பெரிய பதவியில் இருந்த ஒருவர் அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டார். அருவருப்பான வார்த்தைகளில் பேசுவது, சுயநினைவின்றி ஆடைகளின்றி வீட்டில் இருப்பது என்று, அவர் வாழ்ந்த பெருமைமிக்க வாழ்விற்குத் தொடர்பில்லாத நிலையில் இறுதிக் காலத்தில் இருந்தார்.

அல்சைமர் நோய் ஐரோப்பிய நாடுகளில் அதிகம். அதற்குக் காரணம் அங்கு வாழும் மனிதர்களின் நீண்ட ஆயுள்தான். இந்தியாவிலும் வாழ்நாள் அதிகரித்துவரும் இன்றைய காலகட்டத்தில், இனிவரும் நாட்களில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

தவிர்ப்பது எப்படி?

எல்லா மனிதர்களும் இறக்கும் வரை சுயநினைவோடு, கடைசி நிமிடம் வரை யார் உதவியும் இல்லாமல், கொஞ்சம்கூடத் தங்கள் தன்மானம் பாதிக்கப்படாமல் வாழவே விரும்புகிறார்கள். ஒரு மனிதனுடைய அறிவை முற்றிலும் அழிக்கும் அல்சைமர் நோய் வராமல் தவிர்ப்பது எப்படி?

கண்டிப்பாக பேலியோ உணவுமுறை அல்சைமர் நோய் வருவதைக் குறைக்கும். மது, புகையிலை போன்றே சர்க்கரையும் மனித குலத்தின் எதிரி. என்னுடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சர்க்கரையை வீட்டுக்கே வாங்காதீர்கள் என்று நான் அறிவுரை தருகிறேன்.

மறைந்த டாக்டர் கலைஞர் இறக்கும் வரை அபரிதமான புத்திக்கூர்மையுடன் விளங்கினார். அவருடைய மூளையை எப்பொழுதும் தூண்டிக்கொண்டிருந்த ஒரு விஷயம் அவருடைய எழுதும் பழக்கம். பேனாவினால் பேப்பரில் எழுதுவது மூளைக்கு அற்புதமான பயிற்சி. தினமும் நாட்குறிப்பு எழுதுவது அல்சைமர் நோயைத் தடுப்பதற்கான வழிமுறைகளில் ஒன்று. அதேபோல தினமும் இரவு படுப்பதற்கு முன்பு புத்தகம் படிப்பது நல்ல தூக்கத்தையும் உறுதிசெய்யும். மூளைக்குப் புத்துணர்ச்சியையும் தரும்.

நடனப் பயிற்சி அல்சைமர் நோயைத் தடுக்கவும், மூளையில் உள்ள செல்கள் அழியாமல் பாதுகாக்கவும் பயன்படும்.

ஓவியம் வரைவது, கூடை பின்னுவது, களிமண்ணைப் பிசைந்து பொம்மைகள் செய்வது போன்ற கைகளைப் பயன்படுத்தும் நுண்கலைகள், மூளையைத் தூண்டி, மூளை செல்கள் அழிவதிலிருந்து பாதுகாக்கும்.

நண்பர்களோடு பேசுவது, ஒவ்வொரு தினத்தையும் கால அட்டவணைப்படி திட்டமிட்டு வாழ்வது, தங்களால் முடிந்த உடற்பயிற்சியை செய்வது, சுற்றுலா சென்று புதிய இடங்களைப் பார்ப்பது போன்றவையும் மூளைக்குத் தூண்டுகோலாக அமையும்.

அல்சைமர் நோய் ஒரு மனிதனை உருக வைக்கும் கொடிய நோய். குடும்பத்திற்கு எல்லையில்லாத துயரத்தைத் தரும் நோய். நம்முடைய மூளையைத் தூண்டும் செயல்களை செய்து அல்சைமர் நோய் வருவதைத் தவிர்க்கலாம் அல்லது குறைந்தபட்சம் தள்ளிப்போடலாம்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019