மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்!

மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில், பிப்ரவரி 19 ஆம் தேதி சாட்சி விசாரணை நடத்தப்படும் என்று சென்னை 14ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி தனியார் தொலைக்காட்சிக்கு முறைகேடாக 700க்கும் மேற்பட்ட இணைப்புகளை வழங்கியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஏழு பேர் விடுவிக்கப்பட்ட உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து , இந்த வழக்கு மீண்டும் சென்னை 14ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் குற்றச்சாட்டு பதிவுக்காகத் தயாநிதி, கலாநிதி உட்பட 7 பேரும் இன்று (ஜனவரி 30) நீதிபதி வசந்தி முன்பு ஆஜராகி இருந்தனர். அப்போது, மத்திய அமைச்சர் என்ற முறையில் அலுவலக ரீதியாக மட்டுமே தொலைபேசி இணைப்புகளைத் தான் பயன்படுத்தியதாகத் தயாநிதி மாறன் தெரிவித்தார்.

யூகத்தின் அடிப்படையில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுப் பதிவு செய்வதாகத் தெரிவித்த அவர், சாட்சிகளைக் கட்டாயப்படுத்தி தனக்கு எதிராகச் சாட்சி சொல்ல சிபிஐ முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, தன்னையும் தன்னுடைய தொலைக்காட்சி நிறுவனத்தையும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிபிஐ தன்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளதாக கலாநிதி மாறன் தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுகள் பதிவு விவரம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் பிரம்மநாதன், முன்னாள் துணை பொது மேலாளர் வேலுசாமி,முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தயாநிதி மாறனின் உதவியாளர் வேதகிரி கவுதமன், உள்ளிட்டோர் மீது குற்ற சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஊழல் முறைகேடு, உள்ளிட்ட பிரிவுகளிலும் , சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில் நுட்ப அதிகாரி கண்ணன், சன் தொலைக்காட்சி எலக்ட்ரீசியன் ரவி ஆகியோர் மீது குற்ற சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், ஊழல் முறைகேடு ஆகிய பிரிவிலும், சன் தொலைக்காட்சியின் தலைவர் கலாநிதி மாறன் மீது குற்ற சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல், ஊழல் முறைகேடு ஆகிய பிரிவுகளிலும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon