மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 4 ஆக 2020

வறட்சியில் தமிழகக் காடுகள்!

வறட்சியில் தமிழகக் காடுகள்!

கடந்த ஆறு மாதங்களில் பருவமழை சரியாகப் பெய்யாததன் விளைவாக, ஜனவரி மாதத்திலேயே தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் வறட்சி தொடங்கியுள்ளது.

வடகிழக்குப் பருவமழையானது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சற்று தாமதமாகவே தொடங்கியது. தென்தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்கள், வடதமிழகத்திலுள்ள சில கடலோர மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் மழைப்பொழிவு மிகக்குறைவாகவே இருந்தது. இதனால் தமிழகத்தின் உள்பகுதி மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியில் வேளாண்மைப் பணிகள் பெரிய அளவில் நடைபெறவில்லை.

அது போன்று, இம்மாவட்டங்களிலுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் இப்போதே வறட்சி தொடங்கியுள்ளது. தமிழக - கர்நாடக எல்லையில் இருக்கும் மாதேஸ்வரன் மலையை மையமாகக் கொண்ட 86 மலைகளிலும் காடுகள் உதிர்ந்த இலைகளால் நிரம்பியுள்ளன. நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இந்தக் காடுகளில் யானைகள், காட்டெருமைகள், மாடுகள், மான்கள், வரையாடுகள் உள்ளிட்ட ஏராளமான காட்டு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வறட்சியினால் இவை எங்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வனப்பகுதியை ஒட்டிய நிலங்களில் கால்நடை வளர்ப்பு செய்யப்பட்டு வருகிறது. தீவனப் பற்றாக்குறை, வறட்சியான சூழல் போன்றவை கால்நடை வளர்ப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. பருவமழை பொய்த்துப்போனதைப் போலவே, பிப்ரவரி 15 வரை நீடிக்கும் பனிப்பொழிவும் இந்த ஆண்டு குறைந்துவிட்டது. இதனால், வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் உண்டாகும் வறட்சி இப்போதே தொடங்கிவிட்டது.

காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு குறைந்ததனால், மேட்டூரில் நீர்மட்டம் 70 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. இதனால் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்த வறட்சியினால் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இப்பகுதி மக்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

புதன், 30 ஜன 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon