மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

‘இளையராஜா 75’ தடை கேட்ட வழக்கு: ஒத்திவைப்பு!

‘இளையராஜா 75’ தடை கேட்ட வழக்கு: ஒத்திவைப்பு!

‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியை தள்ளிவைக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இளையராஜாவைக் கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இந்த இசைநிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவது உள்ளிட்ட நலத்திட்டப் பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதற்குத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மற்றும் பொது குழு நடத்தக் கோரியும், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட இருக்கும் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் தயாரிப்பாளர்கள் ஜெ. சதீஷ் குமார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு ஜனவரி 28ஆம் தேதி நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் மீது தீவிர குற்றச்சாட்டுகள் கூறப்படுவதால் இளையராஜா 75 நிகழ்ச்சியை ஏன் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கூடாது” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம், நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும், 3500 பேர் இந்த நிகழ்ச்சியைக் காண வர உள்ளதாகவும், மனுதாரர்கள் இந்த நிகழ்ச்சியை நிறுத்த நினைக்கிறார்கள் எனவும் தெரிவித்தது.

“இளையராஜா நிகழ்ச்சிக்காகச் செலவிடப்பட்ட தொகை மற்றும் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை நாளை மறுநாளுக்குள் (ஜனவரி 30) தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத் துணைத்தலைவர் செங்குட்டுவேல் ஆஜரானார். அவர் சார்பில் வழக்கறிஞர்கள் கிருஷ்ணா ரவீந்திரன், சார்லஜ் டார்ன் ஆஜராகி,“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலும், அடிப்படை ஆதாரங்கள் இன்றியும் உத்தேசமாகக் கூறப்பட்டுள்ளவை” என வாதிட்டனர். மேலும் விழாவுக்கான விவரங்கள், ஒப்பந்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

மேலும், “கடந்த நிதியாண்டில் அனைத்து வரவு செலவு கணக்குகளும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்திருக்கிறோம். மார்ச் 3ஆம் தேதி அன்று இந்த ஆண்டுக்கான விரிவான கணக்குகளையும் தணிக்கையாளரிடம் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றனர்.

வழக்கின் இன்றைய விசாரணையின்போது, இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை எனவும், பாராட்டு விழா எனக் கூறிவிட்டு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இதனை மறுத்த தயாரிப்பாளர்கள் சங்க தரப்பு வழக்கறிஞர், அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்து தான் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக விளக்கம் அளித்தார். மேலும், நிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019