மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்!

இன்று மாலை சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, கடந்த 9 நாட்களாக நடந்துவந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசின் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்பது உட்பட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22ஆம் தேதியன்று ஜாக்டோ ஜியோ அமைப்புகளின் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகமெங்கும் தொடங்கப்பட்டது. இன்று (ஜனவரி 30) ஒன்பதாவது நாளாகப் போராட்டம் நடத்தப்பட்டது. ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக என்ஜிஒ சங்கம், கு.ப. சங்கம், நீதித் துறைப் பணியாளர் சங்கம், மருத்துவ ஊழியர்கள் சங்கம், தலைமைச் செயலகம் ஊழியர்கள் சங்கம் ஆகியன இன்று போராட்டத்தில் ஈடுபட்டன. முன்னதாக, ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாகச் செயல்படும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்றே தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்திருந்தார். போராட்டத்தைக் கைவிட்டு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று பேட்டியளித்தார். இதன் தொடர்ச்சியாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜாக்டோ ஜியோவினருக்கு வேண்டுகோள் விடுத்தார். அதில், மாணவர்கள் நலன் கருதி ஜாக்டோ ஜியோ போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், திமுக ஆட்சியில் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென்றும் தெரிவித்தார்.

இதன் பின்னர், மாலை 3 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில், சென்னை தலைமைச் செயலகம் ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதோடு, பிப்ரவரி மாதம் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்ததையும் திரும்பப் பெற்றது.

இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ உயர் மட்டக் குழுவில் போராட்டம் பற்றியும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர். பிப்ரவரி முதல் வாரத்தில் ஆசிரியர்கள் துணையுடன் மாணவர்கள் செய்முறைத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தனர். இதன் மூலமாக, 9 நாட்கள் தமிழகம் முழுவதும் நடந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

போராட்டம் திரும்பப் பெறப்பட்டது குறித்து நம்மிடம் பேசினார் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும் அரசு ஊழியர் சங்கத் தலைவருமான சுப்பிரமணியன். “தேர்வு நெருங்கி வருகிறது. ஆட்சியாளர்களுக்கு மாணவர்கள் நலன் பற்றிக் கவலை இல்லையென்றாலும், ஆசிரியர்களுக்கு அந்த கவலை இருக்கிறது. அதனால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஜாக்டோ ஜியோ போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை குறித்து அறிவித்தால் உடனடியாக வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்துவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், தமிழக அரசின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. “வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிவிப்பு வெளியானால், அதன் பின்னர் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்போது போராட்டம் நடத்தி ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டால், அது தேர்தல் விதிமுறை மீறலாகிவிடும். இதனை மனதில் கொண்டே முதல்வர் பேச்சுவார்த்தை குறித்து எதுவும் பேசவில்லை” என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

5 நிமிட வாசிப்பு

கும்பமேளாவை விட்டு வெளியேறும் சாதுக்கள்!

பிரசித்தி பெற்ற கோயில்கள் மூடல்!

3 நிமிட வாசிப்பு

பிரசித்தி பெற்ற கோயில்கள்  மூடல்!

புதன் 30 ஜன 2019