மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

டிஜிட்டல் திண்ணை 2: இலவச லேப்டாப்- எடப்பாடியை ஏமாற்றும் அதிகாரிகள்!

டிஜிட்டல் திண்ணை 2: இலவச லேப்டாப்- எடப்பாடியை ஏமாற்றும் அதிகாரிகள்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. “இது ஃபாலோ அப் செய்திதான். ஆனால் ஃபவர்புல் செய்தி” என்ற மெசேஜ் மட்டும் வாட்ஸ் அப்பில் இருந்து வந்து விழுந்தது. தொடர்ந்து அடுத்த மெசேஜும் வந்தது.

‘கடந்த ஜனவரி 16-ம் தேதி டிஜிட்டல் திண்ணையில் மாணவர்களுக்கான லேப்டாப்: தரம் குறைக்க முயன்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் நான் சொன்னதை சுருக்கமாக சொல்லிவிடுகிறேன். பிறகு விஷயத்துக்கு வருகிறேன்.

மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இலவச லேப்டாப்புக்கான டெண்டர் இந்த ஆண்டு லெனோவா நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. லெனோவா நிறுவனம்தான் மிகவும் குறைவான தொகையை நிர்ணயம் செய்திருந்ததால் அவர்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது. லெனோவா நிறுவனத்தில் இருந்து இரண்டு மாடல் லேப்டாப் அரசு ஒப்புதலுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு லேப்டாப்பின் சிஸ்மார்க் (செயல் திறன் ) 480. இன்னொரு லேப்டாப்பின் சிஸ்மார்க் 260. மாணவர்களுக்கு எந்த லேப்டாப் கொடுக்கலாம் என ஆர்டர் வாங்குவதற்கு முன்பாக, ஐ.டி.செகரெட்டரி சந்தோஷ்பாபுவையும், எல்காட் எம்.டி. விஜயகுமாரையும் சம்பந்தப்பட்ட லெனோவா நிறுவனத்தை சேர்ந்த சிலர் சந்தித்திருக்கிறார்கள். எல்காட் எம்.டி. விஜயகுமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் செகரெட்டரி விஜயகுமாரின் மைத்துனர்.

அப்போது, ‘260 சிஸ்மார்க் லேப்டாப் கொடுத்தாலே போதும். அதிலேயே ஓரளவுக்கு தேவையான எல்லாமே இருக்கும். எங்ககிட்ட அந்த மாடல் நிறைய ஸ்டாக் இருக்கு. இதற்கு நீங்க அனுமதிக்கணும்’ என்று லெனோவா தரப்பில் இருந்து கேட்டிருக்கிறார்கள். சந்தோஷ்பாபுவும், விஜயகுமாரும் அதற்காக சில டீல் பேசிக் கொண்டு, சிஸ்மார்க் 260 கொண்ட லேப்டாப்புக்கு ஒப்புதல் வழங்கிவிட்டார்கள். மொத்தம் 15.65 லட்சம் லேப்டாப் கொடுக்க வேண்டும். செயல் திறன் குறைந்த லேப்டாப்பும், செயல் திறன் அதிகம் கொண்ட லேப்டாப்பும் ஒரே விலைதான். ஆனால், செயல் திறன் குறைந்த லேப்டாப்பை மாணவர்களுக்கு கொடுப்பதற்காக அந்த இரண்டு அதிகாரிகளுக்கும் சில சலுகைகளை அந்நிறுவனம் பேசி முடித்திருக்கிறது. இந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குப் போய் அவர் அதிகாரிகளை அழைத்து சத்தம் போட்டார். அதையடுத்து, ‘அதிக செயல் திறன் உள்ள லேப்டாப்தான் மாணவர்களுக்கு கொடுக்கிறோம்’ என அதிகாரிகள் தரப்பிலும் முதல்வருக்கு சொல்லிவிட்டுப் போனார்கள்.

அதன் பிறகு கடந்த 28-ம் தேதி அதிகாரிகளின் மீட்டிங் நடந்திருக்கிறது. அன்றுதான் ஜாக்டோ ஜியோ போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த நேரம். அந்த மீட்டிங்கில் பேசிய நிதித் துறை செயலாளர் சண்முகம், ‘முதல்வர் அதிக சிஸ்மார்க் இருக்கிற லேப்டாப் கொடுக்கச் சொன்னா அப்படியே ஒத்துகிட்டு வந்துடுவீங்களா? நாம ஏற்கனவே இங்கே என்ன பேசினோம் என்பதை வெச்சு அவருகிட்ட சொல்ல வேண்டியதுதானே... என்ன சிஸ்மார்க் குறைவாக இருக்கிற லேப்டாப்ல புரசர் ஓப்பன் ஆக கொஞ்சம் லேட் ஆகும். பசங்க பயன்படுத்துற லேப்டாப் ஸ்பீடாக இருந்து மட்டும் என்ன ஆகப் போகுது.

260 சிஸ்மார்க் இருக்கும் லேப்டாப் நாம சொன்னதை நம்பி லெனோவா ரெடி பண்ணிட்டாங்க. அதையெல்லாம் மாத்த முடியாது. அந்த லேப்டாப்தான் பசங்களுக்கு போகணும். இப்போ இருக்கிற பிரச்னையில் முதல்வர் இதையெல்லாம் கவனிக்க மாட்டாரு.. நாம ஏற்கெனவே பிக்ஸ் பண்ணிய விலையில் 100 ரூபாய் குறைவாக கோட் பண்ணிக்கோங்க. அதை நான் அந்த கம்பெனிக்கு பேசிக்கிறேன். அவங்களும் அதுக்கு ஓகே சொல்லிடுவாங்க. முதல்வர் கேட்டாருன்னா ஒரு லேப்டாப்புக்கு 100 ரூபாய் மிச்சப்படுத்தி இருக்கோம்னு சொல்லிடுங்க. அவரா கேட்கும் வரை இதைப்பற்றி யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை. 260 சிஸ்மார்க் இருக்கும் லேப்டாப்புக்கு ஆர்டர் ஓகே பண்ணுங்க. இதுதான் ஃபைனல்.” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு எல்காட் எம்.டி. விஜயகுமார், ‘சார் ஏற்கெனவே இந்த விபரங்கள் எல்லாம் முதல்வருக்கு யாரோ சொல்லியிருக்காங்க. அவரு ஏதோ செயல் திறன் அது இதுன்னு பேசினாரு.. நாம அவரு சொன்னதையும் மீறி இப்படி பண்றோம்னு தெரிஞ்சா சிக்கலாகிடாதா?’ என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு சண்முகம், ‘அதுக்காகத்தான் விலையில் 100 ரூபாய் குறைக்க சொல்லிட்டேன். அவரு கேட்டால் விலை குறைச்சதை சொல்லி சமாளிச்சுக்கலாம். இப்போ இருக்கிற பிரச்னையில் அவருக்கு இதையெல்லாம் கவனிச்சு கேட்க நேரம் இல்லை. இந்த முறை லேப்டாப்ல அவரு படம் இருக்கிற மாதிரி மட்டும் பார்த்துக்கோங்க.. போதும். மற்றதை சமாளிச்சுக்கலாம்..’ என்று சொல்லிவிட்டாராம். , வருவாய் துறை செலவின செயலாளர் சித்திக், குறுக்கிட்டு, ‘அந்த லேப்டாப் தரம் வேறு. இதுவேறு சார். இதுக்கு சாதாரணமாக 100 ரூபாய் கம்மி என்பது அபத்தமாக இருக்கு... அதுவும் இல்லாமல் 260 சிஸ்மார்க் இருக்கிறதெல்லாம் இப்போ யாரும் வாங்குறதே இல்லை. எல்லாம் அவுட் ஆஃப் மார்க்கெட் ஆகிடுச்சு...’ என்று சொன்னாராம்.

அதற்கு சண்முகம், ‘ பசங்களுக்கு இலவசமா கொடுக்கிறதுதானே... இந்த லெவல் போதும். நீங்க அதிக ஸ்பீடா இருக்கிறதை கொடுத்தால் அவங்க படிக்க மாட்டாங்க.. படம்தான் பார்ப்பாங்க. ‘ என்று விளக்கம் கொடுத்ததுடன், ஆர்டருக்கும் கையெழுத்துப் போட்டுவிட்டாராம். முதல்வருக்கு தெரியாமலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019