மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

டிஜிட்டல் திண்ணை 1: திமுக கூட்டணி... கட்சிகள் கேட்பது எத்தனை, ஸ்டாலின் கொடுப்பது எத்தனை?

டிஜிட்டல் திண்ணை 1:  திமுக  கூட்டணி... கட்சிகள் கேட்பது எத்தனை, ஸ்டாலின் கொடுப்பது எத்தனை?

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“அதிமுக, திமுக ஆகிய தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளும் மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. இதில் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை குழுக்கள் இரு கட்சிகளாலும் அமைக்கப்பட்டு, அதிமுக கொஞ்சம் வேகமெடுத்து விருப்ப மனு பெறும் படத்தையும் தொடங்கப் போவதாக அறிவித்துவிட்டது. பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அதிமுகவில் விருப்ப மனுக்களைக் கொடுக்கலாம் என அறிவித்தாகிவிட்டது.

அதேநேரம் அதிமுகவில் கூட்டணிக் குழப்பம் தொடரும் நிலையில் திமுக அணியிலோ கூட்டணிக்குள் யாருக்கு எத்தனை சீட் என்ற கூட்டல் கழித்தல் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுக அணியில் ஒவ்வொரு கட்சியும் கேட்பது எத்தனை சீட்டுகள், திமுக கொடுப்பது எத்தனை சீட்டுகள் என்பதுதான் இப்போது அங்கே டாப் லெவலில் விவாதமாக இருக்கிறது. இதுபற்றி திமுக அணிக்குள் துல்லியமாக விசாரித்தோம்.

திமுக 24 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிடவேண்டும் என்பதில் எள்ளளவும் சமரசம் இல்லாமல் இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதனால் அணியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகள் மீதியிருக்கும் இடங்களில்தான் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன. இப்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இருக்கின்றன. இதில் துரைமுருகன் சொன்னது போல கடைசி நேரத்தில் திடீரென சில கட்சி வரலாம், சில கட்சி போகலாம்.

காங்கிரஸ் கட்சி சென்ற 2014 தேர்தலில் திமுக அணியில் இல்லாததால் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் 41 இடங்களைப் பெற்று எட்டு சீட்டுகள்தான் ஜெயித்தது. இப்போது திமுக அணியில் 12 சீட்டுகளில் தனது பேச்சுக் கணக்கை துவக்கியுள்ளது காங்கிரஸ். ஆனால் திமுகவோ காங்கிரஸுக்கு எட்டு இடங்கள்தான், அதுவும் புதுச்சேரியையும் சேர்த்து என்பதில் தெளிவாக இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தங்களுக்கு தலா 2 இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன. கட்சிகளின் அங்கீகாரம் மீட்டெடுக்க வேண்டியுள்ளதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகபட்ச இடங்களில் போட்டியிட வேண்டும் என்று அந்த கட்சிகளின் தேசிய தலைமைகள் முடிவெடுத்துள்ளன. அதன்படியே தமிழ்நாட்டில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளின் டெல்லி தலைவர்களே திமுக தலைமையிடம் தலா 2 சீட்டுகள் கேட்கிறார்கள். ஆனால், கூட்டணியில் இருக்கும் இடச் சிக்கலை கருத்தில் கொண்டு, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2, இந்திய கம்யூன்ஸ்டு கட்சிக்கு 1 என மொத்தம் 3 சீட்டுகளை ஒதுக்க எண்ணியிருக்கிறது திமுக.

அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே நடந்த மதிமுக மாசெக்கள் கூட்டத்தில், ‘மதிமுகவுக்கு இரண்டு சீட்டுகள் கேட்டுள்ளோம். நம்மை கௌரவமாக நடத்துவார்கள் என்று திமுக மீது நம்பிக்கையுள்ளது’ என பேசியிருந்ததை மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். ஆனால் மதிமுகவுக்கும் ஒரு பெர்த் தான் என்பதே திமுக கூட்டணியில் இப்போதைய முடிவு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனக்கு சிதம்பரம், பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு விழுப்புரம் என்று இரு சீட்டுகளை எதிர்பார்த்தார். ஆனால் திமுக அணியில் சிறுத்தைகளுக்கும் ஒரே ஒரு சீட் தான் என்பதே இப்போதைய நிலைமை.

முஸ்லிம் கட்சிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது திமுகவின் நெடுங்கால தோழமைக் கட்சி என்பதாலும் அதன் தலைவர் காதர் மொய்தீன் கலைஞரின் நண்பர் என்பதாலும் அக்கட்சிக்கு ஒரு சீட் என்பது வழக்கமானது. அதேநேரம் திமுக கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் கட்சிகளில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை விட மனித நேய மக்கள் கட்சியிடமே துடிப்பான தொண்டர்கள் இருக்கிறார்கள், தேர்தல் பணிகளில் மமகவினர் தமிழகம் முழுதும் திமுகவுக்கு தீவிரமாக வேலைபார்ப்பார்கள். எனவே முஸ்லிம் கோட்டாவை மமகவுக்கு கொடுக்கலாம் என்று ஸ்டாலினிடம் ஒரு சிலர் சொல்லியிருக்கிறார்கள். இதை ஸ்டாலின் மறுக்கவில்லை என்றாலும் மமகவை சட்டமன்றத் தேர்தலில் நாம் கவனித்துக் கொள்வோம், இப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒரு சீட் கொடுத்துவிடுவோம் என்று சொன்னாராம் ஸ்டாலின்.

ஆக கூட்டணிக் கட்சிகள் கேட்பதும் திமுக கொடுப்பதும் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் காங்கிரஸ் 8, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்டு 1, மதிமுக 1, விடுதலைச் சிறுத்தைகள் 1, முஸ்லிம் லீக் 1 என மொத்தம் 14 தொகுதிகள் வருகின்றன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மீதமிருப்பவை 26 தொகுதிகள்” என்று வாட்ஸ் அப் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இடைமறித்து ஒரு கேள்வியைப் போட்டது ஃபேஸ்புக்.

“திமுக 24 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட எண்ணியிருப்பதாக ஆரம்பத்தில் சொல்லிவிட்டு இப்போது 26 தொகுதிகள் என்றால் என்ன அர்த்தம்?” என்று கேட்டது ஃபேஸ்புக்.

அதற்கு பதிலை டைப் செய்தது வாட்ஸ் அப். “நியாயமான கேள்விதான். மீதமிருக்கும் 26 தொகுதிகளிலும் திமுக போட்டியிடுமா என்பது இன்னமும் உறுதியாகவில்லை. ஏனெனில் பாமகவை திமுக கூட்டணியில் சேர்ப்பதற்கான இறுதிகட்ட முயற்சிகள் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. பாமக ஏழு மக்களவைத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபாவும் திமுகவிடம் டிமாண்ட் வைத்திருக்கிறது. நான்கு தொகுதி ஒரு ராஜ்யசபா என்றால் கூட ஸ்டாலினிடம் கடைசி கட்டமாக பேசிப் பார்த்து இறுதி செய்யலாம் என்பதே திமுக சீனியர்களிடம் இருந்து கிடைக்கும் செய்தி. ஆகவே பாமக 4 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் திமுக அணியில் இடம் கிடைக்க கடைசி நேர வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் ஸ்டாலினுக்கு பாமகவை உள்ளே இணைப்பதில் ஆர்வம் இல்லை.

அதேநேரம் பாமகவும் திமுக அணிக்கு வந்துவிட்டால்,விடுதலைச் சிறுத்தைகள் இருக்குமா இருக்காதா என்பது அடுத்த கேள்வி. பாமக உள்ளிட்ட மெகா அணியை அமைத்தால் தேர்தல் நிதி திரட்டுவது கொஞ்சம் ஈசியாக இருக்கும் என்று ஸ்டாலினிடம் சிலர் ஒரு சமாதானத்தை முன் வைத்திருக்கிறார்கள். அதற்கு ஸ்டாலின் ஒப்புக் கொண்டு, பாமக 4 ப்ளஸ் 1 என்ற டிமாண்டுக்கு ஒப்புக்கொண்டால் அனேகமாக கடைசி கட்டத்தில் திமுக அணிக்குள் பாமக வரலாம். இப்போது திமுக 22, காங்கிரஸ் 8, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்டு 1, சிறுத்தை 1, முஸ்லிம் லீக் 1 ,மதிமுக 1 ஆக 36 இடங்கள். பாமக ஒப்புக் கொண்டால் அதற்கு 4 இடங்கள். இல்லையேல் அந்த நான்கு இடங்களில் திமுகவே போட்டியிட்டு காங்கிரசுக்கு ஓரிரு இடங்கள் அதிகரிக்கப்படலாம். ஸ்டாலின் இப்போது இந்த கணக்கைத்தான் கூட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார்” என்று சொல்லி முடித்தது வாட்ஸ் அப்.

அதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் தனது ஒரு செய்தியை டைப் செய்யத் தொடங்கியது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

புதன் 30 ஜன 2019