மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

பிரதமருக்குக் கறுப்புக் கொடி: கீழ்த்தரமான செயல்!

பிரதமருக்குக் கறுப்புக் கொடி: கீழ்த்தரமான செயல்!

பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது கீழ்த்தரமான செயல் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 3) கோவை ஈச்சனாரியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கும் நன்மை செய்ய வேண்டுமென நினைப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அனைத்து மாவட்டங்களும் முன்னேற அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். பிரதமர் தமிழகத்துக்கு வரும்போது கறுப்புக் கொடி காட்டுவது மிகவும் கீழ்த்தரமான செயல்.

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு எல்லா வகையிலும் திமுக இடையூறாக இருக்கிறது. மோடி சுயநலம் இல்லாத பிரதமர். அதனால்தான் தைரியமாகச் செயல்படுகிறார். ஒரே ஒரு எம்.பி.யைதான் தமிழக மக்கள் கொடுத்தார்கள் என்று தமிழகத்தை ஒதுக்கி வைத்துவிடவில்லை. ஏராளமான திட்டங்களை அவர் தமிழ்நாட்டுக்குக் கொடுத்துள்ளார். மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். 40 தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். கூட்டணி குறித்து யோசிக்காமல் பாஜகவினர் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

திருப்பூரில் பிப்ரவரி 10ஆம் தேதி பாஜக பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளப் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். முன்னேறிய சமூகத்தினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் பிரதமர் மோடிக்குக் கறுப்புக் கொடி காட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி திருப்பூரில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில் நடந்தது. இதையறிந்த பாரதிய ஜனதா கட்சியினரும், இந்து அமைப்பினரும் அப்பகுதியில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியினரைக் கண்டித்து, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினரும் வெளியில் வந்து கோஷங்களை எழுப்பினர். முன் அனுமதியின்றி அங்கு கூடிய இந்து அமைப்பினரைக் காவல் துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். திருப்பூரில் பிரதமருக்குக் கறுப்புக் கொடி காட்டுவதற்கு முடிவு செய்துள்ளதை இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் உறுதிப்படுத்தினர்.

ஞாயிறு, 3 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon