மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

பழைய பாதையின் சுவட்டில் புதிய பாதை! - காம்கேர் கே.புவனேஸ்வரி

பழைய பாதையின் சுவட்டில் புதிய பாதை! - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - 16

கட்டடம் கட்டும் இடத்தில் பணிபுரியும் மேஸ்திரியின் பிள்ளைகள் மண்ணையும், கல்லையும் வைத்துச் சொப்பு வீடு கட்டி விளையாடுவார்கள்.

இது அவர்கள் தினமும் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியால் ஏற்பட்ட தாக்கமாகக்கூட இருக்கலாம். அதன் தாக்கத்தால் பின்னாளில் சிவில் முடித்து கட்டடம் கட்டும் பணியிலேயே வேலைக்கும் செல்லலாம். அல்லது சொந்தமாகத் தொழில் செய்யலாம். அது அவர்கள் ஆர்வமா அல்லது அதுதான் அவர்கள் திறமையா என்பதை ஆராய்ந்து தங்களுக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில்தான் அவர்கள் வெற்றியே உள்ளது.

ஆனாலும் ஆழ்மனதில் கனன்றுகொண்டிருக்கும் திறமையும் ஆர்வமும் ஏதேனும் ஒரு புள்ளியில் வெளிப்பட்டே தீரும். நிச்சயம் எல்லா தடைகளையும் உடைத்துக்கொண்டு அவரவர்கள் திறமைக்கான பாதையில் செல்வதும் நடக்கத்தான் செய்கின்றன.

அந்தப் பாதை கண்களுக்குத் தெளிவாகப் புலப்பட்டாலும், அந்தப் பாதையில் செல்லுவதற்கான காலம் ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.

பல பெற்றோர்கள் தாங்கள் செய்துகொண்டிருக்கும் துறையில் உள்ள அழுத்தங்களினால் தங்கள் பிள்ளைகளை அந்தத் துறைக்கு வர வேண்டாம் என எண்ணுவார்கள்.

அதுபோலவேதான் 35 வருடங்களுக்கு மேலாக கேட்டரிங் தொழில் செய்துவரும் ராமச்சந்திரனும் அவரது மனைவியும் எண்ணினார்கள்.

ஆனால் அவரது மகனுக்கோ அந்தத் துறையில்தான் ஆசை, கனவு அத்தனையும்.

+2 முடித்த பிறகு அவரவர்கள் இன்ஜினீயரிங், டாக்டர் என முயற்சி செய்து கொண்டிருந்தபோது அவரது மகன் விஜயகுமார் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் கேட்டரிங் படிப்புக்கு அப்ளை செய்து நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்வாகியும் விட்டார்.

ஆனால் பெற்றோர் மறுக்கவே பி.காம், எம்.பி.ஏ முடித்து ஐடி நிறுவனத்தில் ஃபைனான்ஸ் துறையில் ஆறு வருடங்கள் பணிபுரிந்தார்.

இடையில் திருமணம் ஆகிறது. பி.காம் முடித்து ஐடி நிறுவன பி.பி.ஓவில் அக்கவுன்ட்ஸ் துறையில் வேலைபார்த்து வந்த அவரது மனைவியும் திருமணத்துக்குப் பிறகு வேலையை விட்டு மாமனாரின் கேட்டரிங் பிசினஸ் அக்கவுண்ட்ஸைக் கையில் எடுத்துக்கொள்கிறார்.

‘எனக்கும் இதே துறையில்தானே ஆர்வம் இருக்கிறது. நானும் வேலையை விட்டு பிசினஸுக்கு வருகிறேன்…’ என்று சொன்ன விஜய்குமார் தன் ஐடி பணியை விட்டு கேட்டரிங்கை முழுநேரப் பணியாக்கிக்கொள்கிறார்.

இப்போது அப்பாவின் வழிகாட்டுதலின் பேரில் மனைவியின் உறுதுணையோடு வி.ஆர். கேட்டரிங் என்ற தன் அப்பா நடத்திவந்த கேட்டரிங்கை நவீன காலத்துக்கு ஏற்பச் செய்து வருகிறார்.

மற்ற எந்த பிசினஸாக இருந்தாலும் ஏதேனும் ஒரு தவறு ஏற்பட்டால் பிறகு சரி செய்து கொள்ள சில வாய்ப்புகள் இருக்கும். ஆனால் திருமணம் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் சமையல் சொதப்பிவிட்டால் மீண்டும் அதே நிகழ்ச்சிகளில் அதை சரி செய்வது என்பது முடியாத செயல். சொதப்பினால் சொதப்பியதுதான். முடிந்தது முடிந்ததுதான். சரி செய்யவே முடியாது. இந்த பிசினஸில் உள்ள மிகப்பெரிய சவாலே இதுதான் என்கிறார் ஐடி துறையில் சில ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு கேட்டரிங் பிசினஸுக்கு வந்த விஜயகுமார்.

ஓர் இடத்தில் பணிபுரிந்த பின்னர் பிசினஸுக்கு வரும்போது மேனேஜ்மென்ட் முதல் பணியாளர்கள் வரை அத்தனை பேரின் மனோநிலையையும் புரிந்துகொள்ள முடியும். அக்கவுன்ட்ஸ், ஃபைனான்ஸ், ஆடிட்டிங், சேல்ஸ், சர்வீஸ், ஹெச்.ஆர் என எல்லாத் துறைகளையும் கல்லூரி செல்லாமலேயே அனுபவத்தின் வாயிலாகக் கற்றுக்கொள்ள முடியும். அத்தனையும் உங்கள் பிசினஸின் வளர்ச்சிக்கு உதவும்.

- கற்போம்… கற்பிப்போம்!

(கட்டுரையாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி - காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். M.Sc., Computer Science, M.B.A பட்டங்கள் பெற்றவர். தொழில்நுட்பம், வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள:[email protected])

இந்த ஆர்வம் எப்படி வந்தது?

ஞாயிறு, 3 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon