மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

வாழ்க்கையைத் தீர்மானிக்கும் வார்த்தைகள்!

சொல்லைவிடச் செயல்தான் முக்கியம் என்றாலும் வாழ்க்கையில் சொற்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அளவிட முடியாதது. நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் சொற்களைப் பிடித்துக்கொண்டு தானே வாழ்கிறோம்.

அறியாத இடத்தில் தெரியாத நபர்களிடமிருந்தும்கூட ஆறுதலாக, ஊக்கப்படுத்தும் விதமாக ஓரிரு வார்த்தைகள் வரும்போது மிகப் பெரிய பலம் வாய்க்கப் பெற்றவர்களாக உணர்கிறோம். அப்போதைக்கு அந்த வார்த்தைகள் நம்மைத் திடப்படுத்தும், தொடர்ந்து ஓடத் தூண்டுகோலாக அமையும்.

சென்னை வந்த புதிதில் முன்பின் அறிமுகமில்லாத அண்ணன்கள் சிலருடன் அவர்கள் அறையில் சேர்ந்திருந்தேன். சொந்த ஊர் பற்றிய ஏக்கம் ஒருபுறமும், புதிய சூழலை புரிந்துகொள்வதில் உள்ள தடுமாற்றம் மறுபுறமும் என்னை மிகவும் களைப்படையச் செய்திருந்தது. கனவுகளைத் துரத்தி இலக்கினை அடைய உற்சாகத்துடன் வந்திருந்த என்னை இந்த நகரமும் அதன் சூழலும் அசைத்துப் பார்த்தன. ஊருக்கே திரும்பச் சென்று கிடைத்த வேலையைச் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டேன். ஒரு நாள் அலுவலகம் முடிந்துவந்த முருகேஷ் அண்ணன் சோர்ந்திருந்த என் முகத்தைப் பார்த்து பிரச்சினையைப் புரிந்துகொண்டார்.

“உனக்கு முன்னால இங்க சாதிச்சவங்க எல்லாருக்கும் முதல் தடவை இந்த ஊரைப் பார்த்து பயம் இருந்திருக்கும். அதை உதறிட்டு இங்கேயே இருந்துதானே இன்னிக்கு ஜெயிச்சுருக்காங்க” என்று சில வார்த்தைகள் பேசினார்.

அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் இதயத்தில் இறங்கின. எல்லாரும் சொல்றதுதானே என்று சாதாரணமாக தோன்றலாம். அந்த நேரத்தில் அதுதான் என் நன்னம்பிக்கை முனை.

அவரது சொற்கள் ஒவ்வொன்றும் எனக்காகப் படைக்கப்பட்டவைபோல் இருந்தன. அடர்ந்த தாடிக்கு நடுவே புறப்பட்டுவந்த அந்த வாஞ்சையான வார்த்தைகள் என்னைத் தட்டிக் கொடுத்து முன்னோக்கி நகர்த்தின.

சென்னை இன்றைக்குச் சொந்த ஊர் போல என் நெஞ்சுக்கு நெருக்கமாகிவிட்டது. ஆனாலும் அண்ணனின் வார்த்தைகள் என்னோடு இருக்கின்றன. அன்பான வார்த்தைகள் சிலரது வாழ்க்கையை மாற்றும் என்பது நான் கண்டுகொண்ட உண்மை. அதன்பின் அத்தகைய வார்த்தைகளைப் பரிசளிக்க நானும் கற்றுக்கொண்டேன்.

முருகேஷ் அண்ணன் அமெரிக்காவில் குடியேறி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை எழுதும் இந்த நேரத்தில் அவரை மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன். அங்கு ஆங்கிலத்தில் யாருக்கேனும் ஆறுதலான வார்த்தைகளைக் கூறிக்கொண்டிருக்கலாம்.

- மதரா

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon