மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 ஜூலை 2020

யாருடன் கூட்டணி: தினகரன் பதில்!

யாருடன் கூட்டணி: தினகரன் பதில்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து அதன் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சியில் நேற்று (பிப்ரவரி 3) இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க ஐந்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேசியக் கட்சிகள் தமிழகத்தின் நலன்களில் அக்கறை காட்டவில்லை. மாநிலக் கட்சிகள்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதைத்தான் மக்கள் 2014 தேர்தலில் தமிழக மக்கள் தொடங்கி வைத்தார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்களால் நடத்தப்படுகிற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்த மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் நலன்களோடு ஒத்துப்போகிறவரையே பிரதமராகத் தேர்வு செய்ய ஆதரவு அளிக்கும்” என்றார்.

இதனிடையே நேற்று திருவெறும்பூரில் நடந்த அமமுகவின் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சியிலும் தினகரன் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசுகையில், பாஜக மற்றும் அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டுமென்று மக்கள் விரும்புவதாக தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “நீட் தேர்வு கிராமப்புற மாணவ-மாணவிகளின் மருத்துவக் கனவுக்கு குதிரைக் கொம்பாக இருக்கிறது. அதனால் தமிழக மாணவ-மாணவிகளை பாதிக்கக் கூடிய நீட் தேர்வு வேண்டாமென்று ஜெயலலிதா கூறினார். ஆனால், இப்போதிருக்கிற அரசு மத்தியில் ஆள்பவர்களின் கட்டளையை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறது. மத்திய அரசின் கிளை அலுவலகம் போல மாநில அரசு செயல்படுகிறது.

நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது ஒன்றுமே செய்யாதவர்கள், இப்போது இடைக்கால பட்ஜெட்டை அறிவித்திருக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துவதாகவும் கூறி மக்களை ஏமாற்றித்தான் பாஜக வாக்கு வாங்கியது. வருகிற தேர்தலில் இவர்களை டெபாசிட் இழக்கச் செய்வதன் மூலம் மத்திய அரசுக்கும், அவர்களின் ஏஜெண்டாக இருக்கும் மாநில அரசுக்கும் முடிவுகட்ட வேண்டும்” என்றார்.

ஞாயிறு, 3 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon