மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

யோகி ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு!

யோகி ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு!

மேற்கு வங்கத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அரசுக்கு எதிராக தேசிய அளவில் ஒருங்கிணைந்து வரும் மாநிலக் கட்சிகளில் முக்கிய நபராக இருப்பவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. இவர் பாஜக அரசின் செயல்பாடுகளைத் தொடக்கம் முதலே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். நேற்று (பிப்ரவரி 3) மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் மம்தா பானர்ஜியின் வருகையைக் காரணம் காட்டி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மேற்கு வங்கத்தில் 200 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. முதல் பிரச்சாரத்தை பிப்ரவரி 2ஆம் தேதி துர்காபூரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 3) மால்டா மாவட்டம், வடக்கு தினஜ்பூரில் பாஜகவின் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொள்ள யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் வரத் திட்டமிட்டிருந்தார். அவரது ஹெலிகாப்டர் பலூர்காத் பகுதியில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக அவருக்கு அனுமதி வழங்காமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்தது.

இந்த நிலையில் அந்த மாவட்ட நிர்வாகம் நேற்று, திடீரென யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்தது. “மால்டாவில் உள்ள ஹோட்டல் கோல்டன் பார்க்கில் மம்தா பானர்ஜியின் ஹெலிகாப்டரும் தரையிறங்கவிருந்தது. இந்த ஹெலிபேடில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஏராளமான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு ஹெலிகாப்டர் மட்டுமே இங்கு தரையிறங்க முடியும்” என்று மாவட்ட நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

இதையடுத்து யோகி ஆதித்யநாத் இந்த நிகழ்ச்சியில் தொலைப்பேசி வழியாகப் பேசினார். மேற்கு வங்க அரசு ஜனநாயகப் படுகொலை செய்வதாகவும், திட்டமிட்டு வேண்டுமென்றே யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் மோடியும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

ஞாயிறு, 3 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon