மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 பிப் 2019

இரண்டரை வருடங்கள் இருந்ததே சாதனைதான்: திருநாவுக்கரசர்

இரண்டரை வருடங்கள் இருந்ததே  சாதனைதான்: திருநாவுக்கரசர்

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு இரண்டரை வருடங்கள் தலைவராக இருந்ததே சாதனைதான் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக முன்னாள் எம்.பி, கே.எஸ்.அழகிரியை நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நியமித்தார். இவரோடு 4 செயல் தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரியும், முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் டெல்லியில் இன்று (பிப்ரவரி 4) ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். சந்திப்பானது அரை மணி நேரம் வரை நீடித்தது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “தமிழக காங்கிரஸில் இரண்டரை வருடங்களுக்கு தலைவராக இருந்ததே சாதனைதான் என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டரை வருடம் பணியாற்ற வாய்ப்பு தந்ததற்காக ராகுல் காந்தியிடம் நன்றி தெரிவித்தேன். மிகச் சிறப்பாக பணியாற்றினேன் என்று ராகுல் எனக்கு வாழ்த்தும் தெரிவித்தார். நீக்கத்திற்கான காரணத்தை ராகுல் என்னிடம் கூற வேண்டியதுமில்லை. அதனை அவரிடம் நான் கேட்க வேண்டிய அவசியமுமில்லை. ராகுல் மீது அன்பு வைத்துள்ளவன் என்ற முறையில் அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்கிறேன். புகாரின் அடிப்படையில் என்னை ராகுல் காந்தி நீக்கவில்லை. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியை பார்க்கும் வரை தனக்கு வருத்தம் இருந்திருக்கலாம் என்றும், ஆனால் பார்த்த பிறகு தன்னை தலைவராக நியமித்தபோது இருந்த மகிழ்வை விட இரட்டிப்பு மகிழ்வாக இருப்பதாக தெரிவித்த திருநாவுக்கரசர், “ராகுல் காந்தி எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன். இல்லையெனில் ஐந்து ரூபாய் உறுப்பினராகவே இருந்து தொடர்ந்து பணியாற்றுவேன். ராகுலிடம் என்ன பேசினேன் என்பதை வெளியில் சொல்வது நாகரிகம் கிடையாது. என்னை மாற்றியதில் எனக்கு எந்த மனக்கசப்பும் கிடையாது” என்றும் விளக்கினார்.

நீக்கத்திற்கான காரணம் ப.சிதம்பரத்தின் தலையீடுதான் என்று கூறப்படுகிறதே என்னும் கேள்விக்கு, “ப.சிதம்பரம் காங்கிரஸின் தலைவர் இல்லையே, பிறகெப்படி என்னை அவர் நீக்க முடியும். அவர் என்னுடைய நண்பர். ராகுல் காந்திக்கு யாரும் நிர்பந்தம் கொடுக்க முடியாது. பதவியில் இருந்தபோது ஒத்துழைப்பு அளித்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி” என்று பதிலளித்தார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 4 பிப் 2019