மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

மேம்பாலங்களில் செங்குத்து தோட்டம்!

மேம்பாலங்களில் செங்குத்து தோட்டம்!

சென்னை நகரில் மேம்பாலத்தின் தூண்கள் சீர்குலைந்து போவதைத் தடுக்க, பசுமையை உருவாக்கச் செங்குத்தான தோட்டம் அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை தியாகராயநகர் ஜிஎன் செட்டி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் தூண்களில் செங்குத்து தோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக 20 மேம்பாலங்களில் 8 மேம்பாலத் தூண்களில் செங்குத்து தோட்டம் அமைக்கப்படும். இதில், பச்சைத் தாவரங்களும் சிவப்பு இலைத் தாவரங்களும் வளர்க்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.36.1 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்கள் இந்த தோட்டத்தை மூன்று மாதங்களுக்குப் பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகரில் செங்குத்து தோட்டம் அமைப்பதற்குத் தேவையான உலோக சட்டகங்கள் வடிவமைப்புப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் தாவரங்கள் வளர்க்க ஏற்பாடு செய்யப்படும். இது போன்று எட்டு மேம்பாலத் தூண்களிலும் செங்குத்து தோட்டம் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.

தாவரங்கள் வளர்ப்பதினால் பாலத்திலுள்ள தூண்களின் உள்கட்டமைப்பு எந்தவிதத்திலும் பாதிப்படையாமல் இருப்பதை உலோகச் சட்டகம் உறுதி செய்யும். இந்த தோட்டத்தைப் பராமரிப்பதற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதி எதிர்பார்க்கப்படுகிறது. செடி பராமரிப்பு என்பது வெறும் தண்ணீர் ஊற்றுவது மட்டுமல்ல. இது குறித்து நன்கொடை அளிப்பவர்களிடம் பேசப்பட்டுள்ளது.

பெங்களூரு, நாக்பூர் போன்ற இடங்களில் ரயில் மேம்பாலங்களில் உள்ள தூண்களில் இது போன்று செங்குத்து தோட்டம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon