மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

தலைக்கவச விழிப்புணர்வு குறைவு!

தலைக்கவச விழிப்புணர்வு குறைவு!

கிராமப்புறங்களில் தலைக்கவசம் அணிவது குறித்து 30 முதல் 40 சதவிகித விழிப்புணர்வு தான் உள்ளது என்று தமிழகப் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வாரம், வரும் பிப்ரவரி 10ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியை இன்று (பிப்ரவரி 4) சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சேப்பாக்கம் தொடங்கி தீவுத்திடல் வரை ‘சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு’ என்ற பெயரில் விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் 300க்கும் அதிகமான போக்குவரத்துத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் குழுவின் சார்பாக மூன்று 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஆறு இருசக்கர அவசர ஊர்திகள் இதில் பங்கேற்றன. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் விஜயபாஸ்கர்.

நகர்ப்புறங்களில் 75 சதவிகித அளவுக்கும், கிராமப்புறங்களில் 30 முதல் 40 சதவிகித அளவுக்கும் தான் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு உள்ளதாகத் தெரிவித்தார். “ஒப்பந்தம் முடிந்த பின்னரும் சுங்கச்சாவடிகளில் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது நெடுஞ்சாலைத் துறை சார்ந்ததாக இருந்தாலும், புகார் வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று விஜயபாஸ்கர் கூறினார்.

“தமிழகத்தில் விபத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட 25 சதவிகிதம் குறைந்துள்ளது. விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டில் அதிக வாகனங்களைப் பயன்படுத்தி வருவதால் கட்டுப்பாடுகளும் அதிகளவில் விதிக்க வேண்டியுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon