மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

சாதியை ஒழிக்க விஜய் சேதுபதி யோசனை!

சாதியை ஒழிக்க விஜய் சேதுபதி யோசனை!

கல்வியும், கலப்புத் திருமணமும் தான் சாதிப் பாகுபாட்டை ஒழிக்கும் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

சீனு ராமசாமி இயக்கும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி தேசாபிமானி பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வியில் முன்னேற்றமும், காதல் திருமணம் செய்வதும்தான் சிறந்த வழி. பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எந்தத் துறையில் இருந்தாலும் தவறு. #METOO மூலம் பெண்கள் கூறிய பாலியல் புகார்களால் தவறு செய்தவர்கள் பயத்தில் உள்ளனர். பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.

சபரிமலை விவகாரம் குறித்து பேசிய அவர், “நான் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மிகப்பெரிய ரசிகன். சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயனின் முடிவு சரிதான். இந்த விவகாரத்தில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் வருகிறது என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியாகக் கேரள அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டது. அதற்கான எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விஜய் சேதுபதிக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. தற்போது ஜெயராம் நடிக்கும் மார்கோனி மாதாய் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon