மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

இளையராஜா 75: கரை சேர்த்த கமல்

இளையராஜா 75: கரை சேர்த்த கமல்

இராமானுஜம்

இளையராஜா 75 முதல் நாள் நிகழ்ச்சி நடிகர் சங்க நிகழ்ச்சிபோல நடந்தது. நடிகர் விஷாலைச் சுற்றி அரணாக இருந்துகொண்டு பிறரை நெருங்கவிடாமல் அவரைத் தங்கள் விருப்பப்படி ஆட்டுவித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோர் கட்டுப்பாட்டில் முதல் நாள் நிகழ்ச்சிகள் இருந்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இயக்குநர்கள் ஷங்கர், சுந்தர்.சி, ஹரி, எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்துப் பரிகாச நாடகத்தை அரங்கேற்றியதற்கு இதுதான் காரணம். இது பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக இரண்டாம் நாள் நிகழ்ச்சியைத் தயாரிப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் நிகழ்ச்சி வண்ணமயமாக மாறியதைக் காண முடிந்தது.

தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணியில் இருக்கும் திரைக் கலைஞர்களில் இளையராஜாவின் இசையைக் கேட்டு, உணர்ந்து, பயணித்தவர்கள் அதிகம் பேர் இல்லை என்றே கூறலாம். அதனால்தானோ என்னவோ இளைய கலைஞர்கள் இரண்டாம் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. அவருடன் பயணித்த தெலுங்கு நடிகர்கள் மோகன் பாபு, வெங்கடேஷ் இருவரும் வந்திருந்து வணங்கி வாழ்த்தியது தாய்மொழி கடந்து ராஜா இசை அரசாங்கம் நடத்தியதை உணர்த்தியது.

முதல் நாள் நடந்த டிராமாவில் கிண்டலடிக்கப்பட்ட இயக்குநர் ஷங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருந்து மேடையேறி ராஜாவை வாழ்த்தியதும் அவருடன் இணைந்து பணியாற்ற இயலாமல் இருப்பதற்கான காரணத்தை விவரித்ததும் மனதை நெகிழச் செய்தன.

“நான் ராஜா சாரின் இசை கேட்டு வளர்ந்தவன். எனது முதல் படத்தில் இளையராஜாவை இசையமைக்க வைக்க முடிவு எடுத்த பின் அவரிடம் என்னால் வேலை வாங்க முடியுமா என்ற தயக்கம், தாழ்வு மனப்பான்மை, பயம் ஆகியவை அவருடன் இணைய முடியாமல் போகச் செய்துவிட்டன. சிறு வயது முதல் ராஜாவின் இசையைக் கேட்டு, உணர்ந்து வளர்ந்தவன் நான். ராஜாவின் ரசிகனாகவே இன்றும் நான் இருக்கிறேன்” என அவர் மிகுந்த பணிவுடன் சொன்னபோது அரங்கம் ஆர்ப்பரித்தது.

மணி ரத்னம் படம் மூலம் தான் பாடலாசிரியராக மாறியதை, மணி ரத்னம் மேடைக்கு வந்தபோது இளையராஜா பகிர்ந்துகொண்டார்.

ரஜினியை ராஜா மேடைக்கு அழைத்த போது தனது வழக்கமான ஆன்மிக பாணியில் ராஜாவுடனான தனது அனுபவங்களை ரஜினி கூறினார். "இளையராஜா சுயம்பு - இது அபூர்வமானது அதனாலேயே அதற்குச் சக்தி அதிகம், அதனால் தான் 42 ஆண்டுகள் கடந்தும் இளையராஜா இசை உலகில் ஆட்சி செய்கிறார். ஆன்மீகத் தேடலில் ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்து உணர வைத்த சாமி அவர். சரஸ்வதி அவருடன் இருப்பதால் லட்சுமியும் அவருடன் இருக்கிறார். என் படங்களைக் காட்டிலும் கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை இசையமைத்துக் கொடுத்தவர் இளையராஜா” எனக் கூறி விழாவைக் கலகலப்பாக்கினார்.

அதுவரை இயல்பான இசைக் கச்சேரி நிகழ்வாகக் கடந்துகொண்டிருந்த நிகழ்ச்சி கமல் வருகைக்குப் பின் சூடு பிடித்தது என்றால் மிகையில்லை. நேற்றைய நிகழ்ச்சியைக் கலகலப்பாக, அறிவுப்பூர்வமானதாக, அர்த்தமுள்ளதாக மாற்றி தனக்கும் இளையராஜாவுடனான நட்பை, தொழில் உறவைக் காதலுடன் கட்டிப்பிடித்து ராஜாவுக்கு முத்தம் கொடுத்து நிகழ்ச்சியைப் பெரும் வெற்றியாக மாற்றினார் கமல்ஹாசன்.

தமிழ் சினிமாவின் இரு துருவங்களில் ஒருவர், பரபரப்பான அரசியல்வாதி என்பதைக் கடந்து ஒரு கலைஞனாக, ராஜாவின் பரம ரசிகனாகவே மாறினார் கமல்ஹாசன். நேற்றைய தினம் இசைக்கச்சேரியில் பாடப்பட்ட பாடல்களில் எட்டுக்கும் மேற்பட்ட பாடல்களை தன் மகள் ஸ்ருதி ஹாசனுடனும், மற்றும் பிற பாடகர்களுடனும் இணைந்து பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

வந்தோமா வாழ்த்தினோமா என்று பிற நடிகர்களைப் போல அல்லாமல் விழாவைத் தன் வசப்படுத்தி தயாரிப்பாளராக சங்கத்துக்குப் பெருமை சேர்த்தார். திரைத்துறை ஆளுமையாக எந்த நிலையிலும் தன்னால் பிரகாசிக்க முடியும் என்பதைத் தான் பாடிய பாடல்கள் மூலம் நிரூபித்தார். இப்படி ஒரு நிகழ்வு விழாவில் அரங்கேறும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் அரங்கில் அமர்ந்திருந்தபோதே தன்னை அரசியலுக்கு வா என்று அழைத்த சகோதரன் இளையராஜா என்பதைப் பகிரங்கமாக சொன்னார் கமல். என்னை நன்றாகப் பாட வைத்த வாத்தியார் இளையராஜா என்று புகழாரம் சூட்டினார் கமல்.

ஒரு கட்டத்தில் கமலும் - ராஜாவும் இணைந்து பாடிய போது நெகிழ்ந்து ராஜாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போது அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது. கதாநாயகிக்குக் கொடுக்க வேண்டியதை எனக்குக் கொடுத்து விட்டார் என ராஜா கூறிய போது , நான் ராஜாவின் இசையைக் காதலிப்பவன் இந்த மேடையில் முத்தம் கொடுப்பது பொருத்தமானது. இது எங்களது மேடை என்றார் கமல். ஒரு திரை ஆளுமையை அதற்கு இணையான திரை ஆளுமை பாராட்டுவது அபூர்வமானது.

முதல் நாள் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் அதனைச் செய்தார் இரண்டாம் நாள் கமல்ஹாசன் அந்தப் பெருமையைத் தன்வயப்படுத்தி இளையராஜாவைப் பெருமைப்படுத்தினார்.

மோசமான நிகழ்ச்சி வடிவமைப்பால் தடுமாறிக்கொண்டிருந்த விழாவை தன் ஆளுமையால் கரை சேர்த்து தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கௌரவம் தேடிக் கொடுத்திருக்கிறார் கமல்.

(பஞ்சு அருணாச்சலத்தை மறந்த - பண்ணைபுரம்

கங்கையைக் கைகழுவிய ராஜா

இரவு 7 மணிப் பதிப்பில்..)

‘இளையராஜா 75’இல் ரிலீஸாகாத பின்னணி!

திங்கள், 4 பிப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon